குளித்தலை, டிச.22: நங்கவரம் புதிய காவல் நிலைய எல்லை பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் மக்கள்அதிகம் கூடும்இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் காவல் நிலையம் உள்ளது. இக்காவல் நிலையம் குளித்தலை நகரத்தில் தொடங்கி கே.பேட்டை, வதியம், வைகைநல்லூர், சத்தியமங்கலம், திம்பம் பட்டி, ரணியமங்கலம், நல்லூர், இன்னுங்கூர், ராஜேந்திரம், குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்பலாபட்டி, பாப்பக்கா பட்டி, இரும்பூ திப்பட்டி, தேசிய மங்கலம், உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மருதூர், நங்கவரம் பேரூராட்சி பகுதியில் அடங்கிய காவல் நிலையமாக நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால் ஏதாவது குற்ற சம்பவங்கள் ஏற்பட்டால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் பயணம் பிறகு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் 30 கிலோ மட்டர் கடந்து வந்து தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை புகாராக காவல் நிலையத்தில் தெரிவிக்க வரவேண்டிய சூழ்நிலை இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் குளித்தலையில் இருந்து பிரித்து நங்கவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை தமிழக அரசுக்கும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மாணிக்கத்திற்கும் கோரிக்கை வைத்ததுள்ளனர். கோரிக்கையை ஏற்று கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி எம்எல்ஏ மாணிக்கம் சட்டப்பேரவையில் பொதுமக்கள் நலன் கருதி நங்கவரம் பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நங்கவரம் பகுதியில் புதிதாக காவல் நிலையம் திறக்க உத்தரவிட்டதன் பேரில். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் நிலையம் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதனால் நங்கவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இனுங்கூர், நங்கவரம் வாரிக்கரை, கவுண்டம்பட்டி நால்ரோடு, குறிச்சி சேப்பலாப்பட்டி, நெய்தலூர், முதலைப்பட்டி, நச்சலூர், சொட்டல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளாக இருந்து வருகிறது. இப்பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தான் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். ஒரு சில நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படும் நேரத்தில் இது போன்ற கிராமங்களில் தப்பிச் செல்லும் நேரத்தில் எவ்வித தடயங்களும் இல்லாத சூழ்நிலை உருவாகும் நிலை எற்படுகிறது.
அதனால் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் அனைத்து வணிக வளாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் காவல்துறையினருக்கு எளிதாக விரைவில் கண்டுபிடிப்பதற்கு ஒரு கருவியாக இருந்து வருகிறது.
அதனால் நங்கவரம் காவல்துறைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாக இருக்கும் இடத்தை காவல்துறை அதிகாரிகள் தேர்ந்தெடுத்து அங்கே எவ்வித குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
