வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமானது: ஒடிசாவில் இன்று கரை கடக்கிறது

சென்னை: மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகளில்ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ம ாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 220 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. பின்னர் நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலை கொண்டுள்ளது.

இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் தரைக்காற்று 30 கிமீ வேகம் முதல் 40 கிமீ வேகம்வரையில் வீசும். மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

இதே நிலை 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 22ம் தேதியில் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமானது: ஒடிசாவில் இன்று கரை கடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: