போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு அதிபர் பைடன் தேர்தலில் இருந்து விலக வேண்டும்: முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், தேர்தலில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பரில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். தொடக்கத்தில் பைடனுக்கு வரவேற்பு இருந்த நிலையில், டிரம்ப் உடனான நேரடி விவாதத்துக்கு பின் அவரது ஆதரவு வெகுவாக குறைந்தது. இதனால் அதிபர் பைடன் தேர்தல் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்சிக்குள்ளே கருத்துவேறுபாடு எழுந்தது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கட்சியின் முழு ஆதரவு இல்லாத நிலையில் தற்போது அவரது உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

இந்நிலையில் பைடனின் நெருங்கிய நண்பரான முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோர் தேர்தலில் இருந்து அதிபர் பைடன் விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். முன்னாள் அதிபர் ஒபாமா, “அதிபர் பைடன் தனது வெற்றி வாய்ப்பை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். தேர்தலில் போட்டியிடுவதை அவர் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார். இதேபோல் முன்னாள் சபாநாயகர் பெலோசி, தேர்தல் கருத்து கணிப்புக்களை பைடனிடம் முன்வைத்து தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை அவரால் தோற்கடிக்க முடியாது என்று வாதிட்டுள்ளார். இந்நிலையில் அதிபர் பைடன் நேற்று அனைத்து பணியாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த மாதம் சிகாகோவில் நடக்கும் கட்சி மாநாட்டுக்கு முன்னதாக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

 

The post போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு அதிபர் பைடன் தேர்தலில் இருந்து விலக வேண்டும்: முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: