இலங்கைக்கு எதிரான தொடர்; ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜடேஜா நீக்கம் ஏன்? அஸ்வின் போல் இனி டெஸ்ட்டில் மட்டுமே வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டி.20 முறையே வரும் 27,28 மற்றும் 30ம் தேதி பல்லேகலேவிலும், ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7ம் தேதிகளில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டி.20 போட்டிகளில் இருந்து ரோகித்சர்மா, கோஹ்லி, ஜடேஜா ஓய்வு அறிவித்துவிட்ட நிலையில் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், சதம் அடித்த அபிஷேக் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ்கான், முகேஷ்குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. ஹர்திக்பாண்டியா, ரிஷப் பன்ட், அர்ஷ்தீப் சிங், அக்சர்பட்டேல், முகமது ஷமி அணிக்கு திரும்பி உள்ளனர். ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மா கேப்டனாக தொடர்கிறார். விராட் கோஹ்லியும் ஆடுகிறார். ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடத்தை தக்க வைத்துள்ளனர். ரிஷப் பன்ட் 2 ஆண்டுக்கு பின் ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறார். பாண்டியா சொந்த காரணத்திற்காக விலகியதால், அவரின் இடத்தில் ஷிவம்துபே சேர்க்கப்பட்டுள்ளார். ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது இரு அணியிலும் உள்ளனர். ஐபிஎல்லில் கலக்கிய ஹர்ஷித் ரானா ஒருநாள் போட்டிக்கான அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமாருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. மற்றொரு ஆல்ரவுண்டரான ஜடேஜா ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தை பிடித்துள்ளார். ஜடேஜா, உலக கோப்பை டி.20 தொடரில் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. டி.20 போட்டியில் அவர் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இனி இடம் கிடைப்பது அரிதுதான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல இனி அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

The post இலங்கைக்கு எதிரான தொடர்; ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜடேஜா நீக்கம் ஏன்? அஸ்வின் போல் இனி டெஸ்ட்டில் மட்டுமே வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: