நொச்சி நகர் புதிய நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் கோட்டாவில் வீடு தருவதாக பல கோடி சுருட்டல்

* போலி அரசு அதிகாரி காவல் நிலையத்தில் தஞ்சம், பாதிக்கப்பட்டோர் மயிலாப்பூரில் முற்றுகையால் பரபரப்பு

சென்னை: நொச்சி நகர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் கோட்டாவில் வீடு வாங்கி தருவதாக 50க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் வசூலித்து பல கோடி மோசடியில் ஈடுபட்ட போலி அரசு அதிகாரி, பொதுமக்கள் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். சென்னை மயிலாப்பூர் நொச்சிநகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர். அதேநேரம் எப்படியாவது இந்த குடியிருப்பில் வீடுகள் வாங்க அப்பகுதியில் சிலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் தன்னை ஒரு அரசு அதிகாரி என்றுகூறிக்கொண்டு பொதுமக்களிடம் அப்துல்லா என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அவர், எனக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரியும், அவர் மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள் கோட்டாவில் ஒதுக்கப்படும் வீட்டை உங்களுக்கு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன்படி மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் அப்துல்லாவை நேரில் சந்தித்து தங்களுக்கு எப்படியாவது வீடு வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன்படி ஒரு வீட்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 50க்கும் மேற்பட்டோரிடம் ரொக்கமாக பணம் வசூலித்துள்ளார்.

பணம் கொடுத்த அனைவருக்கும் அப்துல்லா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டதற்காக ஆணைகள் மற்றும் டோக்கன் வழங்கியுள்ளார். பணம் கொடுத்த அனைவருக்கும் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் அன்று வீடு ஒதுக்கப்படும் என்றும், உங்களுக்கு போன் மூலம் அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். பணம் கொடுத்த பொதுமக்கள் கலைஞர் பிறந்த நாள் அன்று தங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்று ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், யாருக்கும் வீடு ஒதுக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்று, அப்துல்லாவிடம் வாங்கிய வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகள் மற்றும் டோக்கன்களை காட்டியுள்ளனர். அப்போது தான் அது அனைத்தும் போலியானது என்றும், அப்துல்லா என்ற பெயரில் யாரும் அதிகாரிகள் இல்லை என கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பணத்தை பெற்ற அப்துல்லாவை சாந்தோம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. உடனே அவரது சொந்த ஊரான வேலூரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவரது தாய் மற்றும் சகோதரி அப்துல்லா வீட்டிற்கு வந்து பல மாதங்கள் ஆகிறது என்று கூறியுள்ளனர். இதற்கிடையே நேற்று அப்துல்லா சாந்தோம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி அனைவரும் அப்துல்லா வீட்டிற்கு நேரில் சென்றனர். பணம் கொடுத்தவர்கள் தன்னை எப்படியும் தாக்குவார்கள் என்று அச்சத்தில் அப்துல்லா நேரடியாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ஒன்று கூடி, அரசு அதிகாரி என மோசடியில் ஈடுபட்ட நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் சரணடைந்த நபரிடம் இருந்து பணத்தை பெற்று தருவதாக உறுதியளித்தனர். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

* அரசு முத்திரை வாகனத்தில் வந்து வசூல்
மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த அன்புக்கரசி என்பவர் கூறுகையில், ‘‘புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு குடியிருப்பில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் பெயரை கூறி அவரது கோட்டாவில் தனக்கு வீடு வாங்கி தருவதாக என்னிடம் ரூ.8.50 லட்சம் பணத்தை அப்துல்லா பெற்றார். அவர் தன்னை அரசு அதிகாரி என கூறினார். அதை உறுதி செய்யும் வகையில் அரசு முத்திரையுடன் அவர் அரசு வாகனத்தில் தான் வருவார்.

என்னை போல் பலரிடம் ரூ.5 லட்சத்திற்கு மேல் பணத்தை வாங்கியுள்ளார். அனைவரிடமும் அவர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் அருகே தான் பணத்தை வாங்கினார். இதனால் நாங்கள் அவர் பெரிய அரசு அதிகாரியாகத்தான் இருப்பார் என்று நினைத்து பணத்தை கொடுத்தோம். ஆனால் எங்களை அவர் ஏமாற்றிவிட்டார்’’ என்றார்.

The post நொச்சி நகர் புதிய நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் கோட்டாவில் வீடு தருவதாக பல கோடி சுருட்டல் appeared first on Dinakaran.

Related Stories: