பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு: கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகள் பாய்ந்தது; மேலும் ஒருவருக்கு வலை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பியை தாக்கியது தொடர்பாக 8 பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார் (28). சரக்கு வாகன டிரைவர். இவர் கடந்த 2ம் தேதி விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே சரக்கு வாகனத்தில் வந்தபோது, 6 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்து செம்பொன்நெறிஞ்சி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன்(22), லட்சுமணன்(24), அருண்குமார்(22), மதுரையை சேர்ந்த பாலமுருகன்(25) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், முன்விரோத தகராறில் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே, கொலைக்கு தூண்டுதலாக இருந்த நெல்லிகுளத்தை சேர்ந்த அய்யாவு என்ற வேல்முருகன், வீரசூரன் ஆகியோரை கைது செய்யக்கோரி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே காளிக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென கும்பலில் இருந்தவர்கள் டிஎஸ்பி காயத்ரியின் நெஞ்சில் கை வைத்து தள்ளியும், தலைமுடியை பிடித்து இழுத்தும் தாக்கினர். இதையடுத்து போலீசார், டிஎஸ்பியை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக நெல்லிக்குளத்தை சேர்ந்த பாலமுருகன்(30), அம்மன்பட்டியை சேர்ந்த காளிமுத்து(23), பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த ஜெயராம்குமார், சஞ்சய்குமார், பாலாஜி, ெபான்முருகன்(21), முத்துபட்டியை சேர்ந்த சூர்யா ஆகியோரை அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். பெண் டிஎஸ்பியை தாக்கியது தொடர்பாக கைதான 7 பேர் மற்றும் தலைமறைவானவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ், அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

* போலீசார் லத்தி இல்லாமல் இருந்தால் உடனே சஸ்பெண்ட்: எஸ்பி அதிரடி
பெண் டிஎஸ்பியை போராட்டக்காரர்கள் தாக்கியதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு சில அறிவுரை வழங்கியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்த நொடியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவல்துறையினரும் கையில் லத்தி இல்லாமல் இருக்கக்கூடாது. பாதுகாப்பு பணிக்கு வரும்போது கையில் லத்தி இல்லாமல் யாரையாவது பணியில் பார்த்தால் உடனே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னை நடைபெறும் இடத்தில் வெறும் கையோடு பேசுவதற்கும், கையில் லத்தியோடு பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக அடிதடி போன்ற இடங்களில் வாயில் பேசிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. கையில் லத்தி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பீட் போலீஸ், பந்தோஸ்து போலீஸ், பணியில் இருக்கும் எல்லா போலீசும் நான் பார்க்கும்போது கையில் லத்தி இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்க வேண்டும். அனைத்து டிஎஸ்பியும் ரோல் காலில் கட்டாயம் லத்தி கொண்டு வருவதற்கு போலீசை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு: கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகள் பாய்ந்தது; மேலும் ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: