தொழிற்சாலையில் அவசரகால ஒத்திகை: 14 துறை அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: மணலியில் உள்ள தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் புறவளாக அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிவு ஏற்படுவதாகவும், அதன் விளைவாக சுற்றுப்புறத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்பு அடையும் ஓர் சூழ்நிலையை காட்சிப்படுத்தி அரசுத் துறைகளான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, போக்குவரத்துத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, போக்குவரத்து காவல் துறை உள்ளிட்ட 14 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, இம்மாதிரியான பேரிடரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஒத்திகையை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையேற்றார். திருவொற்றியூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் எம்.வி. கார்த்திகேயன், சென்னை மாநகர மண்டல அலுவலர்-2 கோவிந்தராஜுலு ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பேசினர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 25 படைவீரர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பெட்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புறவளாக அவசரகால கையேடு புத்தகத்தை சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (வடக்கு) வெளியிட்டார். இதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தை சார்ந்த கூடுதல் இயக்குநர் பிரேமகுமாரி, துணை இயக்குநர் சக்தி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுப்புற சூழல் பொறியாளர் வாசுதேவன் உட்பட பிற துறையை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் செந்திகுமார் நன்றி கூறினார்.

The post தொழிற்சாலையில் அவசரகால ஒத்திகை: 14 துறை அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: