பெருந்துறை அரசு மருத்துவமனையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு: இரவு காவலாளி கைது

ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரவு காவலாளியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுமியின் பாதுகாப்பிற்காக மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த 33 வயது பெண் போலீஸ் ஏட்டு மற்றும் கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ் ஏட்டு பிரகாஷ் ஆகியோர் வந்திருந்தனர்.

நேற்று முன்தினம் மதியம் பெண் போலீஸ் ஏட்டுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு, ஓய்வெடுப்பதற்காக உடன் வந்திருந்த ஏட்டு பிரகாஷிடம் கூறிவிட்டு, மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவுக்கு சென்று தூங்கியுளளார்.
அப்போது, தன்னிடம் யாரோ சில்மிஷம் செய்வதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது, ஒரு நபர் அருகில் படுத்திருப்பதை கண்டு கூச்சலிட்டு, அவரை பிடிக்க முயன்றார். ஆனால், அந்த நபர் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஏட்டு, பெருந்துறை போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காசநோய் பிரிவில் இரவு நேர காவலாளியாக வேலை பார்க்கும் பெருந்துறை அடுத்த பெரியமடத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று மோகன்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post பெருந்துறை அரசு மருத்துவமனையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு: இரவு காவலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: