டிஸ்லெக்ஸியா… வெளியில் தெரியாத டிஸபிளிட்டி!

நன்றி குங்குமம் தோழி

வாய் வழியாக அழகாக விடை சொல்லத் தெரிந்த மாணவர்களுக்கு, அதையே எழுதச் சொன்னால் மிகப் பெரிய அழுத்தம் ஏற்படும். வார்த்தைகளை எழுத்துக்கூட்டி எழுதத் தெரியாமல் கேள்விகளை தவிர்ப்பார்கள். அல்லது வார்த்தைகளை தவறாக எழுதுவார்கள். வாசிப்புத்திறன் குறையே இதற்கு முக்கியக் காரணம். இதைத்தான் ‘டிஸ்லெக்ஸியா’ அதாவது, லெர்னிங் டிஸபிளிட்டி என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

‘‘டிஸ்லெக்ஸியா பிறப்பில் குழந்தைக்கு இருக்கும் பிரச்னை. இதை எம்.ஆர்.ஐ. அல்லது சிடி ஸ்கேன் கொண்டு கண்டுபிடித்துவிட முடியாது’’ என விரிவாக நம்மிடம் பேச ஆரம்பித்தவர், டிஸ்லெக்ஸியா மற்றும் ஏடி.எச்.டி (ADHD) குழந்தைகளுக்காக DIKSA என்கிற பெயரில் லெர்னிங் சென்டர் ஒன்றை கடந்த 25 ஆண்டுகளைத் தொட்டு சென்னை தியாகராயா நகரில் நடத்தி வரும் சுதா கணேஷ் செல்லா அவர்களிடம் டிஸ்லெக்ஸியா குறைபாடு குறித்து பேசியதில்…

‘‘குழந்தைக்கு சிரமமாக இருக்கும் ஒன்றை நாம் கவனிக்கத் தவறினால் அதுவே டிஸபிளிட்டியாக மாறும்’’ என்றவர், ‘‘அம்மா அல்லது அப்பா வழியில் இருக்கிற 32 உறவுகளின் ஜெனட்டிக் ஏதாவது ஒரு குழந்தைக்கு வரலாம். 10 குழந்தையில் ஒன்று இதில் பாதிக்கப்படலாம்’’ என்றவர், ‘‘எனது DIKSA சென்டரில் டிஸ்லெக்ஸியா மற்றும் ஏடிஎச்டி குழந்தைகளுக்கான முறையான கற்றல் பயிற்சிகளை வழங்குகிறோம்.

டிஸபிளிட்டி என்றாலும் அந்தக் குழந்தையும் இந்த சமூகத்தின் அங்கமே. ரெகுலர் வகுப்பில் பார்வை குறையுள்ள ஒரு குழந்தை இருந்தால் அந்த வகுப்பே அந்தக் குழந்தையோடு எப்படி பொருந்தி நாமும் வாழ வேண்டும் என்பதை இயல்பாகக் கற்றுக்கொள்ளும். எனவே, டிஸபிளிட்டி குழந்தைகளைத் தனியாக பிரித்துப் பார்க்காமல் அவர்களையும் இந்த சமூகத்தில் இணைந்து நடைபோட வழிவகை செய்ய வேண்டும்’’ என்றவர், சைல்ட் டெவலப்மென்ட் தொடர்பாக பட்ட மேற்படிப்பை முடித்திருப்பதுடன், கல்லூரியில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க, லெர்னிங் டிஸபிளிட்டிக்கான டேட்டா கலெக் ஷன் சென்ற நிலையில், அப்படியே டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கான துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை பகிர்ந்தவாறே மேலே பேச ஆரம்பித்தார்.

‘‘என்னுடையது டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கான நிவாரண மையம் (remedial centre). எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் தனி உச்சரிப்பு (sound) உண்டு. அந்த உச்சரிப்பை எழுத்தோடு இணைத்தால்தான் வாசிக்க முடியும். இந்த இணைப்பு டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கு இருக்காது என்பதே அவர்களின் மிக முக்கியப் பிரச்னை. வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசிப்பதில் இவர்களுக்கு சிக்கல் எழும். 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட 3ம் வகுப்பு புத்தகத்தை எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டிருப்பான்.

ஒரு மொழியை கற்றுக்கொள்ள, குழந்தை அந்த மொழியை தன் செவிகளில் தொடர்ந்து கேட்க வேண்டும். கேட்கும் திறன்தான் குழந்தையின் முதல் படிநிலை. மொழியை கேட்ட பிறகே குழந்தைக்கு பேச்சு வரும். அதனால்தான் செவித்திறன் குறையுள்ள குழந்தைகளால் பேச முடிவதில்லை.வீட்டில் நாம் பேசுகிற மொழியை குழந்தைகள் தொடர்ந்து கேட்டு கேட்டு பேசத் தொடங்கிய பிறகே கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க முயற்சிக்கும். வாசிப்பிற்குப் பிறகே எழுதத் தொடங்கும்.

இதுதான் குழந்தையின் அடுத்தடுத்த படிநிலைகள். ஆனால் நமது கல்வி முறை தவறுதலாக இருப்பதால், எடுத்ததுமே குழந்தையை எழுதும் நிலைக்கு தள்ளுகிறோம். ஒரு குழந்தை வார்த்தைகளை எழுதத் தொடங்கும்போதே டிஸ்லெக்ஸியா குறை இருந்தால் அது ஆசிரியருக்கு தெரிந்துவிடும். வார்த்தைகளை அந்தக் குழந்தை எழுதுகிற முறையை வைத்தே ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகள் ஊரை விற்கும் அளவு திறமையானவர்களாகவும், துறுதுறுவெனவும் இருப்பார்கள். இவர்களின் ஐ.க்யூ சிறப்பாக இருக்கும். சிந்தனைகள் வேகமாக இருக்கும். நிறைய ஐடியாவோடு இருப்பார்கள். ஆனால் எழுத்தில் அதனைக் கொண்டுவர அவர்களால் முடியாது. நன்றாகப் பேசுவார்கள். ஆனால் வாசிப்பு வராது. திக்கித் திணறி எழுத்துக்கூட்டி உச்சரிப்பது, உச்சரிப்புக்கான எழுத்து தெரியாமல், மாற்றி மாற்றிப் போட்டு எழுத்தை எழுதுவது அல்லது ஒரு எழுத்தை விட்டுவிட்டு, ஒரே எழுத்தை திரும்பவும் எழுதி என பிழையாகவே வார்த்தைகள் இருக்கும்.

ஆங்கில உச்சரிப்பான பொனாடிக் (phonetic) இவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை படிப்பதும் இவர்களால் முடியவே முடியாது. இவர்களை மக்கு, முட்டாள், ஸ்லோ லேனர், டல் ஸ்டூடன்ட் என்கிற எந்த பிரிவுக்குள்ளும் அடைக்க முடியாது’’ என்றவர், ‘‘முறையான பயிற்சியை கொடுப்பதன் வழியாக இவர்களின் இந்த வாசிப்பு பிரச்னையை நிச்சயம் சரி செய்ய முடியும்’’ என்கிற நம்பிக்கையை உறுதியாக அளிக்கிறார். இதற்குத் தேவை முறையான பயிற்சி என்கிற சுதா கணேஷ், ‘‘இந்தப் பயிற்சியினை ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோரும் கண்டிப்பாக எடுக்க வேண்டும்’’ என்கிறார். ‘‘குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்களுக்கு மட்டுமே மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

லெர்னிங் டிஸபிளிட்டி உள்ள குழந்தைகளை பெற்றோர் புரிந்துகொள்வதில்லை. பிற குழந்தைகளோடு ஒப்பீடு செய்தே, இந்தக் குழந்தைகள் தாழ்வுமனப்பான்மை, தன்னம்பிக்கை குறைவு போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். குழந்தைகளின் இந்தக் குறைபாட்டை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களை புரிந்துகொண்டு, அவர்கள் மூன்றாம் வகுப்பு படிப்பதற்கு முன்பாகவே, எங்களைப் போன்றவர்கள் நடத்தும் ரிசோர்ஸ் ரெமிடியல் சென்டர்களுக்கு கொண்டுவந்தால் அவர்களின் பிரச்னையை விரைவில் சரி செய்யலாம்.

பள்ளிகளில் டிஸபிளிட்டி குழந்தைகளுக்கான ரிசோர்ஸ் அறைகள் இருந்தாலும், அவை சரியான பயன்பாட்டில் இல்லை. 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறையில்தான் 10ம் வகுப்பிற்குள் நுழைகிறார்கள். இந்த மாணவர்கள் அரசுத் தேர்வை சந்திப்பதில் மிகப்பெரும் சவால்களைச் சந்திக்கவும் நேரும். இதிலும் சிவியாரிட்டி இருக்கிறது.

குழந்தையின் சிவியாரிட்டி பார்த்து அந்தக் குழந்தையை ரெகுலர் பள்ளியில் இருந்து எடுத்து, இது மாதிரியான ரிசோர்ஸ் சென்டர்களில் ஒன் டூ ஒன் முறையில் பயிற்சி கொடுத்தால் அவர்கள் நார்மல் நிலைக்கு நிச்சயம் வருவார்கள். எவ்வளவு விரைவில் உங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறீர்களோ அவ்வளவு நல்லது. இதனால் மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே ரெகுலர் பள்ளி செல்வது தடைபடும்.

குழந்தைகளின் சிவியாரிட்டி பொருத்தும் சிறப்புப் பள்ளிகளை டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கு பரிந்துரை செய்வோம்.பயிற்சிக்குப் பிறகு மீண்டும் ரெகுலர் பள்ளியில் இணைந்து படிக்கலாம். அல்லது ஓப்பன் சிஸ்டத்தில் (NIOS) படித்தும் பள்ளி இறுதித் தேர்வை ஒன்று இரண்டு பேப்பராக இவர்கள் எழுதலாம்.

ஒரு வருடத்தில் 50 முதல் 60 டிஸ்லெக்ஸியா டிஸபிளிட்டி குழந்தைகளை நான் சந்தித்தால் அதில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளே ரிசோர்ஸ் சென்டருக்கு பயிற்சிக்கு செல்கிறார்கள்’’ என வருத்தப்பட்டவர், ‘‘மீதி குழந்தைகள் இறுதிவரை இப்படியேதான் சுழல்கிறார்கள். ஆசிரியர்கள் பள்ளியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சிலபஸ் படி பாடத்தை வேகமாக நடத்துவார்கள். டிஸ்லெக்ஸியா குறைபாடு குழந்தையால் அந்த வேகத்தை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படுவதுடன், படிக்க, எழுத முடியாமல் திணறும்.

எனது DIKSA சென்டரில் பயிற்சி பெற்ற குழந்தைகள் வழியாக பல வெற்றிக் கதைகளும் உண்டு. இங்கு பயிற்சி எடுத்து பிறகு ரெகுலர் பள்ளியில் இணைந்த மாணவர்களில் சிலர், ஆர்கிடெக்சர், ஐஐடி, மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்’’ என்றவர், ‘‘IELS போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் டிஸ்லெக்ஸியா மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் மற்றும் அரசுத் தேர்வுகளில் கூடுதலாக நேரம் போன்றவை வழங்கப்படுகிறது’’ என்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post டிஸ்லெக்ஸியா… வெளியில் தெரியாத டிஸபிளிட்டி! appeared first on Dinakaran.

Related Stories: