தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் பெண்களுக்கு இலவச சட்ட சேவை மையம்

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் பெண்களுக்கு இலவச சட்ட சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான உரிய அதிகாரங்களை பெற்ற ஒரு சட்ட ரிதியான அமைப்பாக 1993ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் சேப்பாக்கத்தில் உள்ள கல்சா மஹால் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது. தற்போதைய மகளிர் ஆணையம் தலைவர் மற்றும் ஏழு உறுப்பினர்களுடன் 2022ம் ஆண்டு முதல் மறுசீரமமைக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கு சட்ட ரீதியான உதவி எளிதில் கிடைக்கச் செய்திடும் நோக்கத்தில், தேசிய மகளிர் ஆணையம் கடந்த 2022 முதல் அனைத்து மாநில மகளிர் ஆணையங்களுக்கும் நிதி உதவி செய்து படிப்படியாக இலவச சட்ட சேவை மையத்தை அமைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் இப்பணிக்கான ரூ.2 லட்சம் நிதியுதவிக்கான அனுமதியை தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து பெற்று மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைந்து, இலவச சட்ட சேவை மையத்தை 15ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் அதன் அலுவலகத்தில் அமைத்து உள்ளது.

இந்த மையத்திற்கு மாநில இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் 5 மணிவரை இந்த மையம் செயல்படும்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் பாதிக்கப்பட்ட மகளிருக்கு நீதித்துறை நிர்வாகத்தின் கீழ் பல்வேறு நிலைகளில் செயல்படும் அதன் அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகள் குறித்து தெரிவித்து அவர்களின் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை பெறுவதற்கு உதவும் ஒற்றைச் சாளர அமைப்பாக செயல்படும்.

The post தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் பெண்களுக்கு இலவச சட்ட சேவை மையம் appeared first on Dinakaran.

Related Stories: