பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் என கூறி பள்ளி ஆசிரியை தாயிடம் ரூ.48 ஆயிரம் நூதன மோசடி

சென்னை: சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் பபிதா கிரேசியா. அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது தாய் எஸ்தர் ராணியை செல்போனில் தொடர்புகொண்ட வினோத்குமார் என்பவர், பிரதமர் மோடியின் கல்வி திட்ட அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.1.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் சேர வேண்டும் என்றால், நான் அனுப்பும் ரெக்யூஸ்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய எஸ்தர் ராணி, வினோத்குமார் அனுப்பிய ரெக்யூஸ்டில் தனது செல்போனில் இருந்து ஸ்கேன் செய்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 5 தவணையாக ரூ.48,716 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன் பிறகு தான் இது மோசடி என தெரியவந்தது. எனவே பிரதமர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் என கூறி பள்ளி ஆசிரியை தாயிடம் ரூ.48 ஆயிரம் நூதன மோசடி appeared first on Dinakaran.

Related Stories: