செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

உத்திரமேரூர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைப் பெருந்தலைவர் வசந்தி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் வரவேற்றார். இந்த முகாமில் பங்கேற்று மனு அளித்த இரண்டு பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் உடனுக்குடன் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவு துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சார வாரியம், மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் தனித்தனியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனுக்குடன் சென்றடைய ஆலோசனை வழங்கினர். இந்த முகாமில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களுக்கான மனுக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சி முடிவில், எம்எல்ஏ சுந்தர், கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய செயலாளர் குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், துணை தலைவர் நந்தா, கவுன்சிலர்கள் சேகர், சுப்பிரமணி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தி ஊராட்சியில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினர். அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கண்ணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமின்போது ஒரத்தி குறுவட்டத்திற்கு உட்பட்ட ஆனந்தமங்கலம், கொங்கரை மாம்பட்டு, தின்னலூர், வட மணிபாக்கம், விண்ணம்பூண்டி, களத்தூர், கரசங்கால், முருங்கை, நெடுங்கல், ஒரத்தி, சிறுதாமூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

குறிப்பாக புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு கட்டணம் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி திருத்தம், வீட்டு வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், புதுமைப் பெண் கல்வி உதவிதிட்டம், ஆதரவற்றோருக்கான உதவி தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 1000த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன.

இவற்றைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதற்கான ரசீதுகளையும் மக்களுக்கு வழங்கி மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரபாபு, ஒரத்தி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி, துணை தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊராட்சி பகுதிகளில் நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகமிற்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் வரவேற்றார்.

ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் சதிஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பானுமதி, ஒன்றிய செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை, தமிழ்நாடு மின்சார வாரிய துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த இந்த முகாமில் செங்காடு ஊராட்சியை சேர்ந்த கார்த்திகேயன் (44) என்கிற மாற்றுத்திறனாளி, தனக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினார். அவர், அளித்த மனு மீது அதிகாரிகள் பரிசீலனை செய்து 10 நிமிடத்தில் மருத்துவ காப்பீடு அட்டைக்கான நகலை கார்த்திகேயனிடம் வழங்கி நெகிழ்ச்சி அடைய செய்தனர்.

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: