கேதார்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் மாயம்: சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: கேதார்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் மாயமாகிவிட்டதாக உத்தரகாண்ட் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி குற்றம்சாட்டினார். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை நிராகரித்தவர் உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. அங்கு பிரதமர் மோடி பூஜை செய்ய நாங்கள் அங்கு எதற்கு என்று கேள்வி கேட்டவர். மேலும் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்களுக்கு எதிராக பேசிவிட்டார் என்று பா.ஜ குற்றம் சாட்டிய போது, அதை மறுத்தவர். அவர் சரியாகத்தான் பேசியிருக்கிறார். இந்துக்கள் வன்முறை செய்வதில்லை என்பதைத்தான் ராகுல் கூறுகிறார் என்று கருத்து தெரிவித்தவர். இந்தநிலையில் மும்பையில் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி நேற்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் சங்கராச்சாரியார் கூறியதாவது: ஜூலை 10ம் தேதி டெல்லியில் கேதார்நாத் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கேதார்நாத்தின் முகவரி இமயமலையில் இருக்கும்போது, ​​அது டெல்லியில் எப்படி இருக்கும்? ஏன் மக்களை குழப்புகிறீர்கள்?. அதுஒருபோதும் நடக்காது. கேதார்நாத்தில் தங்க மோசடி நடந்துள்ளது. அதுபற்றியாரும் ஏன் குரல் எழுப்பவில்லை? கேதர்நாத்தில் ஊழல் செய்துவிட்டு, இப்போது டெல்லியில் கேதார்நாத் கட்டப்படுமா? கேதார்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணவில்லை. இதற்கு யார் பொறுப்பு? இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், ‘‘உத்தவ் தாக்கரே துரோகத்தால் பாதிக்கப்பட்டவர். இதனால் பலர் வேதனையடைந்துள்ளனர். அவரது வேண்டுகோளின்படி அவரைச் சந்தித்தேன். அவர் மீண்டும் முதலமைச்சராகும் வரை மக்களின் வலி குறையாது என்று அவரிடம் கூறினேன். எங்கள் ஆசீர்வாதம் நிறைவேற தேவையானதைச் செய்வேன் என்று என்னிடம் உத்தவ் தெரிவித்தார். துரோகம் செய்வது மிகப்பெரிய பாவம். துரோகம் செய்பவன் இந்துவாக முடியாது. ஆனால் துரோகத்தை பொறுத்துக் கொள்பவன் இந்து. மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த மக்களும் துரோகத்தால் வேதனையடைந்துள்ளனர். இது சமீபத்திய மக்களவை தேர்தலில் பிரதிபலித்தது. எங்களுக்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நாங்கள் துரோகம் பற்றி மட்டுமே பேசுகிறோம். இது இந்து மதத்தின்படி பாவம்’ என்றார்.

The post கேதார்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் மாயம்: சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: