திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காத்திருப்பு அறையை திறப்பதுபோன்று வீடியோ: யூடியூபர் வாசன் மீது வழக்கு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காத்திருப்பு அறை கதவை திறப்பதுபோன்று போலியாக யூடியூபர் டிடிஎப் வாசன் பிராங்க் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் விஜிலென்ஸ் விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் மக்களை கவர்ந்து லைக் வாங்குவதற்காக பைக் ஓட்டும்போது பல வித்தைகளை காண்பித்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது பல வழக்குகள் உள்ளது. மேலும் பைக்கில் வித்தை காட்ட முயன்றபோது விபத்தில் சிக்கி கை, கால்கள் உடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காகவும் வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பைக் ஓட்டும் உரிமத்தை கோர்ட் ரத்து செய்தது. இதனால் அவர் தற்போது காரில் செல்கிறார். சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை பதிவிட்டு பிரபலம் ஆவதை வழக்கமாக கொண்டுள்ள டிடிஎப் வாசன் தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக நாராயணகிரி பூங்காவில் அமைக்கப்பட்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த கதவுகளை திறப்பது போன்று பிராங்க் செய்து ஏமாற்றி வீடியோவை பதிவு செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் டிடிஎப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வாசனுக்கு கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜிலென்சுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் விஜிலென்ஸ் போலீசார், டிடிஎப்.வாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காத்திருப்பு அறையை திறப்பதுபோன்று வீடியோ: யூடியூபர் வாசன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: