ஆந்திராவில் நள்ளிரவு பயங்கரம் ஓடும் ரயிலில் பயங்கர தீ பயணி உடல் கருகி பலி: 2 ஏசி பெட்டிகள் தீக்கிரை

திருமலை: அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக எர்ணாக்குளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு ஆந்திர மாநிலத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு பயணி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லூர், கூடூர், சென்னை பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ேஜாலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம், எர்ணாகுளம் செல்லும் எஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த ரயிலில் 2 ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. இந்த 2 பெட்டிகளில் ஒரு பெட்டியில் 76 பேரும் மற்றொரு பெட்டியில் 82 பயணிகளும் பயணம் செய்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 12.45 மணியளவில் ஆந்திர மாநிலம், அனகப்பல்லியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஏசி பெட்டிகளில் தீப்பிடித்தது. மேலும், நள்ளிரவு நேரம் என்பதால், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது ரயிலில் தீப்பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வேறு பெட்டிகளில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரயில், எலமஞ்சிலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனே பயணிகள் அலறியடித்தபடி ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

பின்னர், ரயில் திடீரென நின்றதால் மற்றப்பெட்டிகளில் இருந்த பயணிகள், ரயில் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்குள், ஒரு ஏசி பெட்டியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்றொரு ஏசி பெட்டிக்கும் பரவியது.
இதனால் அதில் இருந்த பயணிகளும் அலறியடித்தபடி ரயிலை விட்டு கீழே இறங்கி ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் 2 ஏசி பெட்டிகளும் முழுவதும் எரிந்து சேதமானது. இதில் விஜயவாடாவை சேர்ந்த சந்திரசேகர்(70) என்பவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் பல பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அவ்வழியாக வந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தீ முழுவதும் அணைக்கப்பட்டபிறகு, நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் மாற்றுபாதையில் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டது. அதேபோல் தீயில் கருகிய 2 பெட்டிகளை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாக்குளம் நோக்கி புறப்பட்டு சென்றது. முன்னதாக அதில் இருந்த பல பயணிகள் 4 பேருந்துகள் மூலம் அவர்கள் செல்லும் ரயில்நிலைய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

* காரணம் என்ன?
பிரேக்கிங் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக லோகோ பைலட்டுகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம். தொடந்து தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீவிர விசாரணைக்கு பிறகே தீ விபத்துக்கு மின்சாரம் காரணமா, அல்லது ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமா என முழுமையாக தெரியவரும்.

Related Stories: