திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில், அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு மூலவர் கருவறையை ஒட்டியுள்ள வைகுண்ட வாயில் (சொர்க்க வாசல்) திறக்கப்பட உள்ளது. பின்னர், மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதன்பிறகு ஏற்கனவே ஆன்லைனில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 60 ஆயிரம் டோக்கன் என மூன்று நாட்களுக்கு 1.80 லட்சம் இலவச டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. எனவே டோக்கன் பெற்ற பக்தர்களை மட்டும், தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பூஜை நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில், பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், டோக்கன் இல்லாவிட்டால் வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்காக நேற்று திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன் ரத்து செய்யப்பட்டதால், நேரடியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களை நேற்று இரவு 10.30 மணி வரை அனுமதிக்கப்பட்டு, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் வெளியே உள்ள அனைத்து வரிசைகளும் காலி செய்யப்பட்டது. மேலும், திருமலையில் கூடுதலாக 2 ஆயிரம் போலீசாரும், திருப்பதியில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சொற்கவாசல் தரிசனத்திற்காக ஏழுமலையான் கோயில் எதிரே, மலர்கள் மற்றும் பழங்களால் வைகுண்டத்தில் ரங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருக்கும் விதமாக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் கோயில் உள்ளேயும், வெளியேவும் சுமார் 8 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று காலை 9 மணிக்கு 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில், மலையப்ப சாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி, பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். தொடர்ந்து வைகுண்ட துவாதசியையொட்டி நாளை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
