புதுடெல்லி: ஆரவல்லி மலைத்தொடர்களில் சட்டத்திற்கு புறம்பாக சுரங்க வேலைகள் நடப்பதாக கூறி மலைத்தொடருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆரவல்லி மலைத்தொடர் சுரங்க பணிகள் குறித்த அறிக்கையை வழங்க அமைத்த குழு, அதுசார்ந்த வரையறை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதனை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ஏற்றுக்கொண்டது. அதில், 100 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்டவை மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும் என்றும், அதற்கு கீழ் உள்ளவற்றில் சுரங்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்பது ஒன்றிய அரசின் வரையறை ஆரவல்லி மலைத்தொடரின் 90 சதவீதம் மலைப்பகுதிகள் இதனால் பாதிக்க கூடும் என அச்சம் தெரிவித்து இயற்கை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை தானாக முன் வந்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆரவல்லி மலை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு வழங்கிய வரையறைகள் மற்றும் கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். இந்த விவகாரத்தில் விரிவான விளக்கங்கள் தேவைப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அதுவரை ஆரவல்லி மலைத்தொடர் மற்றும் அதன் குன்று அமைந்துள்ள பகுதிகளில் சுரங்க பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
