திருச்சி, ஜூலை 8: திருச்சியில் நேற்று நடந்த ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருங்கால வைப்பு நிதி தனி உதவியாளர் மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவன சேவை அதிகாரிகளுக்கான தேர்வை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் ஆய்வு செய்தார். திருச்சியில் ஒன்றியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருங்கால வைப்பு நிதி தனி உதவியாளர் மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவன சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இதில் நேற்று காலை நடந்த வருங்கால வைப்பு நிதி தனி உதவியாளர் பணிக்கான தேர்விற்கு மொத்தம் 506 பேர் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வு 2 தேர்வு மையங்களில் நடந்தது. இதில் 117 பேர் தேர்வு எழுதினர். 389 பேர் தேர்வு எழுத வரவில்லை. பின்னர் மதியம் ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவன சேவை அதிகாரி தேர்வானது 9 மையங்களில் நடந்தது. இதில் 2 ஆயிரத்து 864 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 2 ஆயிரத்து 169 மட்டுமே பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 695 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வுகளை, சுங்கத்துறை கூடுதல் ஆணையர் ஹரீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் நடந்த வருங்கால வைப்பு நிதி தனி உதவியாளர் தேர்வை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வுகளை சப்-கலெக்டர் நிலையிலான பறக்கும் படை அலுவலர்கள், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையிலுள்ள அலுவலர்கள் தேர்வுக்கூடங்களை கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வந்து தங்களது ஹால் டிக்கெட்டுகளை சரிபார்த்து எந்தவித அச்சமின்றி தேர்வு எழுதினர்.
The post ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 11 மையத்தில் இருவேறு பணிகளுக்கான தேர்வு கலெக்டர் பிரதீப்குமார் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.