ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு தொகை இரட்டிப்பு: ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரையும் கொண்டு வரவும், காப்பீடு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையையும், காப்பீடு தொகையையும் இரட்டிப்பாக்க ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மேலும், தற்போது ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவாகும்போது அதை காப்பீடு திட்டம் மூலம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, காப்பீடு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,076 கோடி கூடுதல் செலவாகும் குடும்பங்களை கடன் சுமைக்குள் தள்ளும் முக்கிய காரணங்களில் மருத்துவ செலவுகள் இருப்பதால் இதற்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் தந்துள்ளதாகவும், வரும் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு தொகை இரட்டிப்பு: ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: