திருச்சியில் 3055 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி, ஜூலை 7: திருச்சியில் 3055 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுபடி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் ரோந்து அலுவலக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் திருச்சி ஜி.ஹெச் அருகே ரேஷன் அரிசி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்று பார்த்தபோது, இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் ரேஷன் அரிசியை கிராமங்களில் குறைந்த விலைக்கு வாங்கி அதனை மாட்டு தீவனத்திற்கு அதிக விலைக்கு விற்பதாக விசாரணையில் தெரிந்தது.
அப்போது அங்கு இருந்த திருச்சி வண்ணாரப்பேட்டயை சேர்ந்த சதாம் உசேன் (28) சிந்தாமணியை சேர்ந்த திவாகர் (20) மற்றும் மகேந்திர பூபதி (20) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 1855 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெடுங்குளம் செயிண்ட் சேவியர் சர்ச் அருகே திருச்சி அண்டங்குண்டான் தெருவில் வசிக்கும் பாலகுரு (28) என்பவர் சுமார் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி உள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு டூவீலரையும் கைப்பற்றி இவர் மீது வழக்கு பதிவு செய்து கைது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post திருச்சியில் 3055 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: