உச்சத்தை எட்டிய மலை காய்கறி விலை

*மகிழ்ச்சியில் நீலகிரி விவசாயிகள்

ஊட்டி : நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக ஊட்டி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவு மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, அவரை உட்பட பல்வேறு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் கிராக்கி அதிகம். இதனால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு கூட அதிகளவு மலை காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், மலை காய்கறிகளின் உற்பத்தி சற்று சரிந்தது. அதேசமயம், அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்தது. தொடர்ந்து, பல மாதங்களில் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் சில மலை காய்கறிகளின் விலை உச்சத்தில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளில் முக்கியமான உருளைக்கிழங்கிற்கு கடந்த 15 நாட்களாக விலை உயர்வு ஏற்பட்டு தற்போது கிலோ ஒன்று ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மண்டிகளில் கிலோ ஒன்று ரூ.100க்கு ஏலம் போவதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. அதேபோல் தற்போது கடந்த ஒரு வாரமாக பீட்ரூட் கிலோ ஒன்று ரூ.60 முதல் 80 வரை விற்பனையாகிறது. ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மண்டிகளில் கிலோ ஒன்று தரத்திற்கு ஏற்ப ரூ.60க்கும் மேல் ஏலம் போகிறது.

அதேபோல், நீலகிரியில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் கேரட்டும் தற்போது கிலோ ஒன்று ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் புஸ் பீன்ஸ், வால்டெக்ஸ், கறி பீன்ஸ் ஆகியவைகளுக்கு மார்க்கெட்டில் விலை அதிகமாக கிடைத்து வருகிறது.

இவைகளின் விலை கடந்த சில மாதங்களாக சீராக உள்ளதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. தற்போது ஊட்டியில் விளைவிக்கப்படும் பீன்ஸ் கிலோ ஒன்று ரூ.80 முதல் 100 வரை தரத்திற்கு ஏற்ப விலை போகிறது. இது மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் டர்னீப் கிலோ ஒன்று ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில காய்கறிகளின் விலையும் மற்றும் சைனீஷ் வகை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post உச்சத்தை எட்டிய மலை காய்கறி விலை appeared first on Dinakaran.

Related Stories: