பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்தில் தென் மாவட்ட கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர். இவர் மீது சில குற்ற வழக்குகள் உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ஆம்ஸ்ட்ராங், கட்டுமான பணிகளை பார்வையிட்டபோது 8 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதனை தடுக்க வந்த அவரது அண்ணன் வீரமணி, அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அப்துல் கனி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து அன்றிரவே 8 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேரில் ஒருவரான செல்வராஜ் என்பவர் திருநின்றவூரில் பாஜ கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த சிவசக்தி (26) ஆகிய 3 பேர் சரணடைந்துள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வடசென்னையில் பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் என்பவருக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஆற்காடு சுரேஷை கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து ஒரு கும்பல் கொலை செய்தது. அப்போது இந்த கொலையில் ஒற்றை கண் ஜெயபால் நவீன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஆம்ஸ்ட்ராங் சம்பந்தப்பட்டுள்ளார் என ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தனர். அன்று முதல் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பல்வேறு திட்டங்களை தீட்டி வந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் உடன் பிறந்த தம்பி பொன்னை பாலு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல ஆண்டுகளாகவே தொடர்ந்து எனது அண்ணன் ஆற்காடு சுரேஷூக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவரால் எனது அண்ணன் படுகொலை செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து எங்களது தொழிலிலும் பிரச்னை ஏற்பட்டதால் எனது குடும்பமும் பிரிந்து விட்டது. இதனால் அவரை பழி தீர்க்க நினைத்து எனது அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் அவரை வெட்டி படுகொலை செய்தோம் என பொன்னை பாலு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

* கொல்லப்பட்ட பாணி.. போலீஸ் சந்தேகம்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் இதுவரை சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை பயன்படுத்தி வேறு சில ரவுடிகளும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குறிப்பாக அவர் கொலை செய்யப்பட்ட விதம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் கொலை செய்வது போல உள்ளது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக கழுத்தில் வெட்டிவிட்டு, அவர் ஓடக்கூடாது என்பதற்காக காலில் வெட்டி, அவர் தங்களை தாக்க கூடாது என்பதற்காக கையில் வெட்டி, அதன் பிறகு சரமாரியாக தொடர்ந்து அவரை வெட்டியது போலீசாருக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முக்கிய நபருடன் நிலம் தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளதாகவும், இதனால் அந்த நபருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

* சீசிங் ராஜாவை நோட்டமிடும் போலீசார்
ஆற்காடு சுரேஷை கடந்த ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வைத்து கொலை செய்ய முதலில் அந்த கும்பல் முயற்சி செய்துள்ளது. ஆனால் ஆற்காடு சுரேஷ் வரும்போது அவருடன் சீசிங் ராஜா சுமார் 40 பேருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இருவரும் நண்பர்கள். அதனால் அப்போது அவரை ஏதும் செய்யாமல் அந்த கும்பல் ஒதுங்கிக் கொண்டது. அதன் பிறகு சீசிங் ராஜா அங்கிருந்து சென்று விட்டார்.

ஆற்காடு சுரேஷ் மீன் சாப்பிடுவதற்காக பட்டினப்பாக்கம் சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஆற்காடு சுரேஷிற்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக சீசிங் ராஜா உள்ளே வருவார் என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலையில் சீசிங் ராஜாவுக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை நடக்கிறது.

The post பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது appeared first on Dinakaran.

Related Stories: