குமரி மாவட்டத்தில் நெற்பயிர்களை அழிக்கும் கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள்

*விவசாயிகள் கவலை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி நடந்து முடிந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இருந்தும், பல்வேறு இடங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யும் பணி நடந்து வருவதால், தோவாளை சானலை நம்பியுள்ள 6500 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி பணி கேள்வி குறியாகியுள்ளது. மாவட்டத்தில் கடைவரம்பு பகுதிகளில் போதிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. இதனால் கடைவரம்பு விவசாயிகள் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் தற்போது சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கன்னிப்பூ சாகுபடி பணி முடிந்துள்ளது. ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டு சுமார் 10 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரை ஆகியுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை பறவை இனங்கள் அழித்து வருகிறது. வயல்களை உழும்போது கொக்குகள் கூட்டம் கூட்டமாக வயல்களில் வந்து, அங்கு கிடக்கும் புழு, பூச்சி, நண்டுகளை பிடித்து உண்ணும்.

அதுபோல் நடவு செய்யப்பட்ட வயல்களிலும் புழு, பூச்சிகளை பிடித்து உண்ணும். கொக்குகளால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழியாமல் இருக்க, விவசாயிகள் வயல்களில் ஆங்காங்கே வெள்ளை துணிகளை கம்பில் கட்டி வைப்பார்கள். வெள்ளை துணிகள் காற்றில் அசையும் போது அதனை பார்க்கும் கொக்கு பயத்தில் அங்கிருந்து பறந்து சென்றுவிடும். ஆனால் தற்போது குமரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் கூட்டம் கூட்டமாக கருப்பு அரிவாள்மூக்கன் இன பறவைகள் வருகிறது. இந்த இனபறவைகள், வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை உட்கொள்ளாமல், சாகுபடி செய்து இருக்கும் நாற்றின் இளம் குருத்துக்களை உணவாக உட்கொள்கிறது. மேலும் கால்கள் வாத்தின்கால் போல் இருப்பதால் இளம் நாற்றுகள் கால்களில் மாட்டி சேதமாகிறது. இதனை தடுக்க முடியாமல் விவசாயிகள் திணறிவருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பரவலாக கருப்பு அரிவாள்மூக்கன் இன பறவைகள் அதிகமாக இருந்தது. அவைகள் கூட்டம் கூட்டமாக வந்து சாகுபடி செய்து இருந்த நாற்றுகளை அழித்து வந்தன. கடந்த இரு வருடங்களாக இந்த இன பறவைகள் காணவில்லை. ஆனால் தற்போது மீண்டும் குமரி மாவட்டத்தில் தென்படுகிறது. சாகுபடி செய்து சில நாட்களே ஆன நெற்பயிர்களை இந்த பறவைகள் உணவாக உண்டு, அழித்து விடுகின்றன. என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

The post குமரி மாவட்டத்தில் நெற்பயிர்களை அழிக்கும் கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள் appeared first on Dinakaran.

Related Stories: