தேனி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அரசினர் ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதையடுத்து மாணவர்கள் வருகிற ஜூலை 15ம் தேதிக்குள் சேரலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, போடி ஆகிய இடங்களில் அரசினர் ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூலம் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா சைக்கிள், பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேனி, போடி, ஆண்டிபட்டி அரசினர் ஐடிஐக்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 மட்டும் நேரில் செலுத்த வேண்டும். வரும் 15ம் தேதிக்குள் நேரடியாக வந்து விண்ணப்பங்களை பதிவு செய்து சேரலாம் என தெரிவித்துள்ளார்.

The post தேனி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: