ஊத்துக்கோட்டை, டிச.18: ஊத்துக்கோட்டையில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று மார்கழி மாத தேய்பிறைபிறை பிரதோஷத்தை முன்னிட்டு, காலையிலேயே விநாயகர், முருகன், வள்ளி-தெய்வானை, ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர், மாலை 5 மணிக்கு நீலகண்டேஸ்வரர் முன்பு உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையிலேயே விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர் மற்றும் சர்வ மங்களா தேவி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை வால்மீகிஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இப்பூஜைகளை தலைமை குருக்கல் கார்த்திகேசன் சிவாச்சாரியார் செய்தார். இதேபோல், தேவந்தவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத தேவநாதீஸ்வரர் கோயில் நந்திக்கும் பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகளை கோயில் குருக்கல் தரம் விக்ரம் செய்திருந்தார்.
