வைகோ, திருமாவளவன் இரங்கல் ஈழத்தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தவர் சம்பந்தன்

சென்னை: ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தவர் ரா.சம்பந்தன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி மூச்சு அடக்கும்வரை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சர்வதேச அளவிலும் குரல் கொடுத்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆறாத் துயர் அடைந்தேன்.

ஈழத்தமிழர் உரிமைக்காகவும், சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தார் ரா.சம்பந்தன். அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் பரிதவிக்கும் தமிழரசு கட்சியினருக்கும், இல்லத்தினருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): ஈழத் தமிழர்களின் முதுபெரும் தலைவர் ரா.சம்பந்தன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. 1956ம் ஆண்டு தனது 23வது வயதில் இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்து, 91வது வயது வரை ஓய்வு ஒழிவின்றி தமிழர் நலன்களுக்காக பாடாற்றியவர். அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியலில் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் தமிழ் மக்களுக்கும், இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுதந்திரத்திற்கு பிறகான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக ரா.சம்பந்தன் இருந்தார். ஈழத்தமிழர் சிக்கலுக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு அதில் உறுதியாகவும் இருந்தார். அவரது மறைவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வைகோ, திருமாவளவன் இரங்கல் ஈழத்தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தவர் சம்பந்தன் appeared first on Dinakaran.

Related Stories: