விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு சேகரிப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 திருநங்கைகள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

முதற்கட்டமாக, இத்தொகுதியில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை, தேர்தல் துறை அறிவிப்பின்படி, வீட்டிலிருந்தவாறே தபால் வாக்குச்சீட்டின் மூலம் செலுத்திடும் பொருட்டு, சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க, நடமாடும் தபால் வாக்குசீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2,304 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,473 பேர் என மொத்தம் 5,777 வாக்காளர்களிடம் 12டி படிவம் வழங்கப்பட்டு தபால் வாக்கு விருப்பம் கோரப்பட்டது.

அதில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 290 பேரும், 277 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 567 பேர் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் நேற்று விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட்டன. 7 குழுக்களாக பிரிந்து இந்த பணியில் ஈடுபட்டனர். தபால் வாக்கு சேகரிக்கும் பணியை கலெக்டர் பழனி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாளை (3ம் தேதி) வரை இந்த தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: