மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு : வைகோ காட்டம்

சென்னை: “மோடி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து, கோடிக்கணக்கான ஏழை மக்களை வயிற்றில் அடிக்கும் வகையில் திட்டத்தையே நீர்த்துப் போக செய்ய முயற்சிக்கிறது” என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று டிசம்பர் 16-ம் தேதி தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்தியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் அரசின் கொள்கை, வழிகாட்டுதல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) பகிர்ந்து கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இச்சட்டம் வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீர்க்க ஒரு முக்கியமான மற்றும் நிலையான தீர்வாக அமைந்தது. கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி ஏழ்மை நிலையில் இருந்து விடுபடுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2014-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ஒட்டுமொத்தமாக செயல் இழக்க சதிகளை அரங்கேற்றி வந்தது.

2008 மற்றும் 2011-க்கு இடையில், இந்தத் திட்டத்துக்கான ஆண்டு ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருந்தது. ஆனால் மோடி அரசு இத்திட்டத்துக்கான நிதியை ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில் குறைத்துக் கொண்டே வந்தது. 2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் நிதியை ஒன்றிய அரசு குறைத்தது.

2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான். இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க முடியாமல் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு இத்திட்டத்தில் பயனாளிகள் ஆதார் இணைக்கவில்லை என்று நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களை பட்டியலில் இருந்து நீக்கியது.

அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் பொறுப்பில் இல்லாத மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. இந்த சூழலில்தான் இந்த திட்டத்தின் பெயரை, ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர்மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், புதிய ஊரக வேலை உறுதித் திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரிலிருந்து தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு மோடி அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இதன் மூலம் மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் ஒன்றிய அரசு மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டி இருக்கிறது. மகாத்மா காந்தியை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய கூட்டம் பின்னணியில் இருந்து வழி நடத்துகிற பாஜக ஆட்சியில் இவையெல்லாம் வியப்புக்குரியதல்ல.

மோடி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து, கோடிக்கணக்கான ஏழை மக்களை வயிற்றில் அடிக்கும் வகையில் திட்டத்தையே நீர்த்துப் போக செய்ய முயற்சிப்பது மன்னிக்க முடியாத துரோகச் செயலாகும். மோடி அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சட்டப்பேரவை தேர்தலில் உரிய பாடம் கற்பிப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: