புதுச்சேரி: விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல. அவர் அடிபட்டுதான் போவார் என்று அண்ணாமலை தெரிவித்தார். முருக பக்தர்கள், இந்து இயக்கங்கள் சார்பில் தீபப் போராட்டம் மற்றும் முருக பக்தர்களை இழுவுபடுத்தியதாக புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கத்தை கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேடையில் தீபம்போன்ற ஒரு தூண் வடிவமைக்கப்பட்டிந்த நிலையில் அதில் தீபம் ஏற்றி போராட்டம் நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், ‘திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பிரச்னை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1920ல் உருவாக்கப்பட்ட பிரச்னை. சுதந்திரத்துக்கு பிறகு வெவ்வேறு காலக்கட்டத்தில் வேண்டும் என்றே வழக்கை போடுவார்கள். இஸ்லாம், கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே குன்றில் தீபம் ஏற்றுவது என்பது நம்முடைய வழக்கம். மகாத்மா காந்தியின் பெயர் இந்தியாவில் எப்போதும், எல்லா இடங்களிலும் இருக்கும்’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், ‘திருப்பரங்குன்றம் விவகாரம் விஜய் எதுவும் பேசவில்லையே’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ‘கம்முனு இருக்கும் இடத்தில் கம்முனு இருக்கணும், கும்முனு இருக்குற இடத்தில் கும்முனு இருக்குணும்னுதான் விஜய் இருக்கிறார். ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கணும், இல்ல இந்த பக்கம் நிக்கணும், ரோட்டுக்கு நடுவுல நின்றால் அடிபட்டுதான் போவார். விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல. புதுச்சேரி வந்தபோது சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசிய விஜய் ஏன் தற்போது பெரும்பான்மையினர் விவகாரத்தில் வாய் திறக்காமல் உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஏன் பேசவில்லை. மக்களும் அவரை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலில் தெரியும். புதுச்சேரி மக்களும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்’ என்றார்.
