விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இதில் 27ம் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவற்றை நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினை குறித்து பேசலாம் என தெரிவித்தார். ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைப்போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின. எனினும் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் தொடங்கியது. பா.ஜனதா எம்.பி. சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பா.ஜனதா எம்.பி. கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர்.

இந்த நிலையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் தொடங்குகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி முழக்கத்தில் ஈடுபட்டனர். மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டி உள்ளனர். முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தது குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இன்றைய கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: