ஆந்திராவில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாதுகாப்புக்கு தாமதமாக வந்த போலீசாரை கண்டித்த அமைச்சரின் மனைவி: முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எச்சரிக்கை

திருமலை: ஆந்திர மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ராம்பிரசாத்ரெட்டி. இவரது மனைவி ஹரிதாரெட்டி. நேற்றுமுன்தினம் ஆந்திரா முழுவதும் முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அதேபோல் ராயசோட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராம்பிரசாத்ரெட்டியின் மனைவி ஹரிதாரெட்டியும் பங்கேற்றார்.

இதற்காக அவர் ராயசோட்டிக்கு வீட்டில் இருந்து செல்ல இருந்தார். ஆனால் அப்போது பாதுகாப்புக்கு வரவேண்டிய போலீசார் வரவில்லையாம். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது பாதுகாப்புக்காக போலீசார் வந்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த ஹரிதாரெட்டி போலீசாரிடம், என்ன கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா? நான் எங்கு சென்றாலும் நீங்கள் எனக்கு பாதுகாப்பாக வர வேண்டும்’ எனக்கூறி ஆவேசமாக பேசி கண்டித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்திற்கு சென்றது.

இதனால் அதிருப்தியடைந்த அவர், அமைச்சர் ராம்பிரசாத்ரெட்டிக்கு உடனடியாக போன் செய்து போலீசாரிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டித்தார். மேலும் போலீசாரிடம் ஹரிதாரெட்டி பேசிய விதம் தவறு. இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும். அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் அனைவரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மக்கள் சேவகர்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் தவறு. அவர்களை மன்னிக்க மாட்டேன் எனக்கூறி எச்சரித்தார். இதையடுத்து, மனைவி நடந்து கொண்டதற்கு அமைச்சர் ராம்பிரசாத் ரெட்டி வருத்தம் தெரிவித்தார்.

The post ஆந்திராவில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாதுகாப்புக்கு தாமதமாக வந்த போலீசாரை கண்டித்த அமைச்சரின் மனைவி: முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: