கள்ளக்குறிச்சி உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடுகிறார் எடப்பாடி: கருணாஸ் தாக்கு

சென்னை: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜ அரசு பிடுங்கிய போது, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்துவிட்டு தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர். இப்போது அவற்றை எல்லாம் மறந்துவிட்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார். சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்னைக்கு பேசாது மவுனமாய் இருந்த எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார்.

எத்தனை முறை மக்கள் பிரச்னையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார் அதுவும் மறந்துவிட்டார் போல, எல்லாம் நாடகம். கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும், பாஜவும் ஆதாய அரசியல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்திருந்தால் சி.பி.ஐ. விசாரணை கூட கேட்கலாம் தவறில்லை. ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததை பார்த்த பிறகும், எடப்பாடி சி.பி.ஐ. விசாரணை கேட்பது நாடகமே. அதிமுகவின் தொடர் தோல்வியை மூடிமறைக்க எடப்பாடி பழனிசாமி ஆடும் கபடநாடகமாகும்.

The post கள்ளக்குறிச்சி உயிரிழப்பை வைத்து கபட நாடகமாடுகிறார் எடப்பாடி: கருணாஸ் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: