ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை ஆனதால் ஜார்கண்ட் முதல்வர் பதவி விலக முடிவு?: ஆளுநர் உதவியுடன் சட்ட சிக்கலை உருவாக்க பாஜக திட்டம்

ராஞ்சி: ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை ஆனதால் ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் பதவி விலக முடிவு செய்துள்ளார். ஆனால் ஆளுநர் உதவியுடன் பாஜக சட்ட சிக்கலை உருவாக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், மாநில முதல்வருமாக இருந்த ஹேமந்த் சோரன், கடந்த ஜன. 31ம் தேதி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் உடன், ஹேமந்த் சோரன் அம்மாநில ஆளுநர் இல்லத்துக்கு சென்றனர்.

பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் ஆளுநரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், மாநில அரசின் போக்குவரத்து துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராக இருந்த சம்பாய் சோரனை புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். தொடந்து அங்கு சம்பாய் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

கிட்டத்தட்ட 5 மாதங்களாக ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பிர்சா முண்டா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலைக்கு வெளியே கூடி இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ஆண்டின் இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வட்டாரங்கள் கூறுகையில், ‘முதல்வர் சம்பாய் சோரன் நேற்று முன்தனம் (வெள்ளிக்கிழமை) மாலையே பதவி விலக முன்வந்தார். ஆனால் ஹேமந்த் சோரன் அனுமதிக்கவில்லை. சம்பாய் சோரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கவே விரும்பினார். இந்த ஆண்டின் இறுதியில் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வருவதால், அதுவரை சம்பாய் சோரன் முதல்வராக ெதாடரவே வாய்ப்புள்ளது.
வரும் அக்டோபர்-நவம்பரில் அரியானா, மகாராஷ்டிரா தேர்தலுடன் ஜார்கண்ட் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. உண்மையில் டிசம்பரில் தான் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும். எனவே 3 மாநில தேர்தல்கள் ஒருகாலகட்டத்தில் நடத்தப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும்.

அதற்குள் சம்பாய் சோரனை பதவியில் இறக்கிவிட்டு ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க முயன்றால், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மூலம் எதாவது சட்டச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்மூலம் ஆட்சி நிர்வாகம் ஆளுநரின் கைக்கு போகவும் வாய்ப்புள்ளது. பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலாக இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே (ஜூலை, ஆகஸ்ட்) உள்ளதால், அதற்குள் புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொள்ள ஹேமந்த் சோரன் விரும்பவில்லை. அவர் தனது கவனத்தை பேரவை தேர்தலில் செலுத்த உள்ளார். எப்படியாகிலும் ஜூலை முதல் வாரத்தில் ஹேமந்த் சோரன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்’ என்றனர்.

பாஜகவின் 2 ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்கள்: 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டப் பேரவையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – 29, காங்கிரஸ் – 17, ஆர்ஜேடி- 1, சிபிஎம்எல் -1 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேநேரம் பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்களும், அதன் கூட்டணிக் கட்சியான ஏஜெஎஸ்யூ கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். மேலும் என்சிபிக்கு ஒரு எம்எல்ஏவும், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நியமன எம்எல்ஏவும், இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். ஜார்கண்ட்டின் அண்டை மாநிலங்களான சட்டீஸ்கரில் பழங்குடியின முதல்வர் விஷ்ணு தியோ சாய், ஒடிசாவில் பழங்குடியின முதல்வர் மோகன் சரண் ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து ஹேமந்த் சோரன் கூறுகையில், ‘பழங்குடியினரை முதல்வர்களாக நியமித்துள்ளதாக பாஜக பிரசாரம் செய்கிறது. ஆனால் அவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்கள்’ என்று கூறினார்.

The post ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை ஆனதால் ஜார்கண்ட் முதல்வர் பதவி விலக முடிவு?: ஆளுநர் உதவியுடன் சட்ட சிக்கலை உருவாக்க பாஜக திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: