கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஜூன் 27: திருவண்ணாமலையில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை திரவுபதி அம்மன் கோயில் தெருவில் போலி டாக்டர் ஒருவர் வீட்டிலேயே கிளினிக் நடத்தி, ஆங்கில முறை சிகிச்சை அளித்து வருவதாக கிடைத்த புகாரின் பேரில், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி தலைமையிலான குழுவினர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, திரவுபதி அம்மன் கோயில் தெருவில் மணி என்பவரது வீட்டில் போலி கிளினிக் நடந்து வந்தது தெரியவந்தது. அங்கு, ஊசி, மருந்து, மாத்திரைகள் இருந்தன. சிகிச்சைக்காக 5க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு காத்திருந்தனர். மேலும், ஆங்கில மருத்துவம் படிக்காத மணி(73) என்பவர் ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசில் இணை இயக்குனர் மலர்விழி கொடுத்த புகாரின்பேரில், போலி டாக்டர் மணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Related Stories: