10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி

வந்தவாசி, ஜூன் 26: வந்தவாசி அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆயிலவாடி கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாம். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அருண்குமார்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் விடுமுறையில் தனது பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவியிடம், அருண்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகவலை அறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தார். தொடர்ந்து, திருமண வயது ஆகாத மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தினார். அதில், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அருண்குமார் கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள அருண்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி appeared first on Dinakaran.

Related Stories: