நீலகிரி, கொடைக்கானல், குமரி, நெல்லையில் கனமழை: மண் சரிவு, மரம் முறிந்ததால் 3 பேர் பலி

* ஆறுகளில் வெள்ளம், வீடு, கடைகள் இடிந்து சேதம்

கூடலூர்: தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி, கொடைக்கானல், குமரி பகுதியில் கனமழை காரணமாக மண் சரிவு, மரம் முறிந்தும், சிக்னல் கம்பம் சரிந்தும் 3 பேர் பலியாகினர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூர், நடுவட்டம், தேவர் சோலை, நாடுகாணி, ஓவேலி, முதுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துவங்கிய மழை 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் சிற்றாறுகள் மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவில் சற்று ஓய்ந்த மழை அதிகாலையில் மீண்டும் துவங்கி தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது.

கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பிகளின் மேல் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரது கடையின் மீது மண் சரிந்தது. இதனால் கடை முழுமையாக சேதமடைந்தது. இதேபோல் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்து 5 வீடுகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. ஒரு சில வீடுகளுக்குள் லேசாக தண்ணீர் புகுந்தது. ஆங்காங்கே விழுந்த மரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

கூடலூரில் நேற்று முன்தினம் இரவில், சுமார் 1 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று அதிகாலை முதலே நகரப்பகுதியான பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, செண்பகனூர் மட்டுமின்றி கிராமப் பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, வில்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு, போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது.

அப்போது சாலையில் நடந்து சென்ற சின்னப்பள்ளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (38), தெரசா நகரை சேர்ந்த தாஸ் (56) ஆகியோர் மேல் சிக்னல் கம்பம் விழுந்து படுகாயமடைந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் தாஸ் உயிரிழ்ந்தார். சுரேஷ் தொடர் சிகிச்சையில் உள்ளார். ஓசூரில் மரம் விழுந்து 2 பேர் பலி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரப்பா(45), வெங்கடேஷ் (33). செப்டிக் டேங்க் லாரி டிரைவர்கள். நேற்று, ஓசூர் பகுதியில் கழிவுகளை லாரியில் நிரப்பி கொண்டு, எடவனஹள்ளி பகுதியில் கொட்டி விட்டு, மீண்டும் ஓசூர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஓசூர் 45வது வார்டு மத்திகிரி குஸ்னிபாளையம் பகுதியில் வந்தபோது, ஏற்கனவே பெய்த மழை காரணமாக சரிந்திருந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு முறிந்து லாரி மீது விழுந்தது. இதில், மாரப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர், உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

குமரியில்: குமரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டி அமைந்துள்ள மலை கிராமங்களான தடிகாரன்கோணம், வாழையத்துவயல், கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, கரும்பாறை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக காளிகேசம் பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து, கரையோரம் அமைந்துள்ள காளி கோயிலை சூழ்ந்தது. அன்னாசி அறுவடைக்கு சென்றிருந்த தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளம் வந்ததும் ஜீப்பில் வெளியேற முயன்றனர். ஆனால், காட்டாற்று வெள்ளத்தில் ஜீப் சிக்கியது. தொழிலாளர்கள் அபயக்குரல் எழுப்பினர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து அவர்களை கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பும் மீட்கப்பட்டது.

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் தென்காசியில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, களக்காடு தலையணைக்கும், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கும் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

The post நீலகிரி, கொடைக்கானல், குமரி, நெல்லையில் கனமழை: மண் சரிவு, மரம் முறிந்ததால் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: