ஆந்திர தேர்தலில் தோல்வி; ஜெகன்மோகனை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்

திருமலை: ஆந்திர தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த ஜெகன்மோகனை பார்த்து அவரது கட்சி தொண்டர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஜெகன்மோகன் ஆறுதல் கூறினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன்ரெட்டி, 3 நாள் பயணமாக தனது சொந்த ஊரான புலிவெந்துலாவுக்கு நேற்றிரவு சென்றார். கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து கடப்பா சென்ற அவருக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். பின்னர் சாலை மார்க்கமாக புலிவேந்துலாவுக்கு சென்றார். அவரது வருகையை அறிந்த அவரது கட்சியினர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். யாரும் எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத சிலர், ஜெகன்மோகன் வீட்டு மீது கற்களை வீசினர். இதில் ஜெகன்மோகனின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. ஜெகன்மோகன் வருவதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. கற்களை வீசியது யார்? என பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஜெகன்மோகன் வீட்டின் மீது கற்கள் வீசிய சம்பவம் நடந்த நிலையில் இணையதளங்களில் அந்த காட்சி வைரலானது. அதில், கடந்த 5 ஆண்டுகளாக சொந்த தொகுதியான புலிவேந்துலாவை கண்டுகொள்ளாமல் தாடேபள்ளியில் ஜெகன்மோகன் இருந்ததால் அவரது வீட்டின் மீது சொந்த கட்சியினரே கற்கள் வீசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜெகன்மோகனின் வீட்டு வாசலில் பல மணி நேரமாக காத்திருந்து பெண்கள் வரவேற்றனர். ஜெகன்மோகனை கண்டதும் அவரது கட்சியினர் மற்றும் பெண்கள், `ஆந்திர மக்களுக்காக நலத்திட்டங்களை அள்ளிக்கொடுத்தும் இவ்வளவு மோசமான தோல்வி ஏற்பட்டு விட்டதே’ எனக்கூறி கதறிஅழுதனர். அவர்களை ஜெகன்மோகன் சமாதானம் செய்தார்.

 

The post ஆந்திர தேர்தலில் தோல்வி; ஜெகன்மோகனை பார்த்து கதறி அழுத தொண்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: