கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர், சென்னை.

எனக்கு வாயுத்தொல்லை அடிக்கடி ஏற்படுகிறது. அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரிவில்லை. அதற்கு ஏதாவது எளிய சிகிச்சை இருந்தால் சொல்லுங்களேன்…
– பிரபஞ்சன், திருவண்ணாமலை.

`வாயுத்தொல்லை’ என நீங்கள் குறிப்பிடுவது எது என்று தெரியவில்லை. செரிமானக் கோளாறுகள், வயிறு மந்தமாக இருப்பது அல்லது ஆசன வாய் வழியே வாயு வெளியேறுவது போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தால், பிரச்னை இல்லை. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது, மசாலாப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது, வயிறு நிறையச் சாப்பிடாமல் இருப்பது போன்ற சில வாழ்வியல் மாற்றங்களைச் செய்துகொண்டாலே போதும்.

ஏப்பம், நெஞ்செரிச்சல், ஏப்பத்தின் போது சுவாசத்தில் துர்நாற்றம் அடிப்பது போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தால் அவை வேறு பிரச்னைகள். உதாரணமாக, இரைப்பை அமிலப் பிரச்னை (Acid Reflux), வயிற்றுப் புண் (Peptic Ulcer), பித்தப்பைக் கல், பெருங்குடல் கட்டி போன்ற சில நோய் பாதிப்புகளின் அறிகுறிகளாகவும் அவை இருக்கக்கூடும். மருத்துவரிடம் ஆலோசித்து எண்டோஸ்கோபி (Endoscopy), ஸ்கேன் (Scan), காலனோஸ்கோபி (Colonoscopy) போன்ற பரிசோதனைகள் மூலம் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சைகளை
மேற்கொள்ளுங்கள்.

எனக்கு மாதவிடாய் நாட்களில் அளவுக்கு மீறிய ரத்தப்போக்கும் வலியும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் வலியைக் குறைப்பதற்காக, மாத்திரை உட்கொள்கிறேன். `இப்படி மாத்திரை சாப்பிடுவதால் கர்ப்பப்பை பாதிக்கப்படும், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்’ என்றெல்லாம் என் தோழிகள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைப்போல் மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கத்தான் வேண்டுமா? பிறகு, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியைக் குறைக்க என்ன செய்வது?

– நே.வனிதா, தேனி.

ஒன்றிரண்டு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது தவறில்லை. சிலர் ஒரே நாளில் நான்கைந்து மாத்திரைகள் சாப்பிடுவார்கள். அது முற்றிலும் தவறான பழக்கம். எந்த நாளில் அதிக வலி எடுக்கிறதோ அன்றைக்கு மட்டும் மாத்திரை போட்டுக்கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் ஏதாவது ஒரு நாளில் வலி இருப்பது இயல்பானது. அது ஓரிரு மாத்திரைகளில் சரியாகவில்லை என்பதற்காக அதிக மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. வலிக்காக அதிக மாத்திரைகள் உட்கொண்டால் வாந்தி, மயக்கம் போன்றவற்றை உடல் வெளிப்படுத்தும். வலி ஓரிரு மாத்திரைகளிலேயே குறைய வேண்டும். இல்லையென்றால், பரிசோதனை செய்து வயிற்றில் கட்டி ஏதாவது இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

“என் கணவருக்கு சர்க்கரை அளவு 400 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் அவருக்கு உடலின் ஒருபக்கம் மரத்துப்போய்விட்டது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?’’

– ராஜ சுலோச்சனா, திருநின்றவூர்.

“சர்க்கரை அளவு இவ்வளவு அதிகமாக இருப்பது நல்லதல்ல. 120 – 180 என்பதுதான் சரியான அளவு. இவ்வளவு அதிகமாக இருந்தால், கணையச் செயல்பாடுகள் நின்றுவிடும். உடல் சார்ந்த ஏதாவது பாதிப்புக்கு மருந்து சாப்பிட்டால்கூட, உடல் அதை ஏற்காது. அந்த அளவுக்குச் சர்க்கரையின் அளவு உடலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். முதலில் சர்க்கரைநோய் நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு, இன்சுலின் மருந்துகளால் அந்த அளவைக் குறையுங்கள். சர்க்கரை அளவுக்கும், உடல் மரத்துப்போவதற்கும் தொடர்பிருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, நரம்பியல் மருத்துவரைச் சந்தித்து, மரத்துப் போனதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.’’

என் உதடு எப்போதுமே வறண்ட நிலையில் உள்ளது. அத்துடன் உதட்டின் தோல் உரிந்துகொண்டே இருக்கிறது. இதைச் சரிசெய்ய அதிகமாகத் தண்ணீர் குடிப்பதுடன் லிப் பாமும் பயன்படுத்திப் பார்த்தேன். ஆனால், வெயில், குளிர் என எல்லாக் காலத்திலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?

– பி.ஆர்.கண்மணி, சேலம்.

உதடுகள் வறண்டு போவதற்கு ரத்தச்சோகை, வெப்பமான சூழலில் அதிகம் நிற்பது, நோய்த்தொற்று போன்றவை காரணமாக இருக்கலாம். உதடு வறண்டால் அதன் தோல் பகுதியில் வெடிப்புகள் உருவாகும். அப்போது உதட்டின் மேல் உள்ள தோலை உரிப்பது என்பது பிரச்னையை அதிகரிக்கும். உதட்டில் அதிகம் எச்சில் படுவதும்கூட ஆபத்தானதே. அதுவே நோய்த்தொற்றை ஏற்படுத்தும். நாக்கு வறண்டு போகாமல் பார்த்துக்கொண்டாலே, சில தினங்களில் பிரச்னை தானாகச் சரியாகிவிடும்.

அப்படியும் சரியாகவில்லையென்றால், சரும மருத்துவரின் ஆலோசனைப்படி `லிப் பாம்’ பயன்படுத்தலாம். எல்லா நேரங்களிலும் பாதிப்பு இருந்தாலும், மூக்கு, கீழ் உதடு, காதின் பின்புறம், கைகள் போன்ற பகுதிகளில் பிரச்னை தொடர்ந்தாலும் கவனமாக இருக்கவேண்டும். சிலநேரங்களில் இது சருமப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால் பரிசோதனை செய்துகொள்வது
நல்லது.

எனக்கு 37 வயதாகிறது. இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது, மாதவிடாய் ஏற்படும்போது அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்களை சமீபகாலமாகப் பெரிதும் எதிர்கொள்கிறேன். அந்த நேரத்தில் சரும ஒவ்வாமையும், தொண்டை எரிச்சலும் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் வியர்க்கிறது. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறேன். இது ஏதாவது நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ என்று பயமாக உள்ளது. அதுபற்றி விளக்குங்கள்.

– எம்.அனுராதா, கோவை.

40 வயதைத் தொடும் பெண்களுக்கு, உடலளவில் சில மாற்றங்கள் ஏற்படும். அதில் முக்கியமானது மெனோபாஸ். மாதவிலக்கு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்புக் குறைவதால் ஏற்படுவதே இது.மெனோபாஸுக்கான அறிகுறிகளாக சீரற்ற மாதவிடாய், மூட் ஸ்விங், தூக்கமின்மை, ஒவ்வாமை, இரவுநேர வியர்வை போன்றவை ஏற்படும். ஆகவே இந்த அறிகுறிகளை மையமாக வைத்து அதை ஒரு நோய் என்று நினைத்துவிட வேண்டாம்.

அதிக ரத்தப்போக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்களுக்குச் சரியான மருத்துவப் பரிந்துரை இல்லையென்றால், புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம். மற்றவர்கள் இதுபற்றிப் பயப்படத் தேவையில்லை.

பருமனான உடல்வாகு கொண்டவள் நான். இரவு தூங்கச்செல்லும்போது காலில் வலி ஏற்படுகிறது. சமீபகாலமாக, குதிகாலில் வலி அதிகமாக இருக்கிறது. ஹீல்ஸ் அணிவது, உடல்பருமன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்றதால், ஹீல்ஸைத் தவிர்க்கிறேன்; நிறைய நடக்கிறேன். ஆனாலும், வலி குறையவில்லை. பகல் நேரத்திலும் குதிகாலில் வலி தொடர்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எளிய சிகிச்சை இருந்தால் சொல்லுங்கள்.

– பி.சி.எஸ்.சுதா, ஊட்டி.

உடல்பருமனாக இருக்கும் பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. நாள் முழுவதும் அதிக எடையைக் கால்கள் தாங்குவதால், வலி வருவது இயற்கையே. அதிக எடை இருப்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முழுத் தீர்வு, உடல் எடையைக் குறைப்பதே. அது அல்லாமல், ‘ப்ளான்டர் ஃபேசிட்டிஸ்’ (Plantar Fascitis) என்ற பிரச்னை இருப்பவர்களுக்கு, குதிகாலில் வலி ஏற்படும்.

ப்ளான்டர் ஃபேசிட்டிஸ் என்பது கால் விரல்களையும், குதிகால் பகுதியையும் இணைக்கும் எலும்பில் நோய்த்தொற்று ஏற்படுவதைக் குறிக்கும். பெரும்பாலும், ஆயின்மென்ட் தடவுவது, ஐஸ் ஒத்தடம் கொடுப்பது, உடல் எடை குறைப்பது, கால்களுக்கான பயிற்சிகளைச் செய்வதன் வழியாக வலியைப் போக்கலாம். இவற்றைக் கடைப்பிடித்தும் பிரச்னை தொடர்ந்தால் எலும்புப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்னை ஏதும் இருந்தால், அல்ட்ரா சவுண்ட் தெரபி (Ultra Sound Therapy), ஸ்டீராய்ட் ஊசி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Related Stories: