இளைஞர்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலசூழலாலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தாலும் எண்ணெற்ற நோய்களும், உபாதைகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒன்றுதான் உயர் ரத்த அழுத்தம். முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களையே பாதித்து வந்த உயர் ரத்த அழுத்தம், சமீபகாலமாக இளம் வயதினரிடையே அதிகரித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கின்றன. இளைஞர்களை குறி வைத்து தாக்கும் இந்த உயர் ரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம். அதிலிருந்து விடுபடும் வழிகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பொது நல மருத்துவர் பூர்ணிமா ராஜ்.

உயர் ரத்த அழுத்தம் என்பது என்ன.. உயர் ரத்த அழுத்தம் இளைஞர்களுக்கு அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன.. நமது ரத்த நாளங்களின் சுவரை ரத்தமானது அதிக வீரியத்துடன் தள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்தம் என்பது சைலன்டாக நுழைந்து நமது ஆரோக்கியத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

பொதுவாக, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதே உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். மேலும், உடல் பருமனாக இருந்தாலோ, அதிக உப்பு சேர்த்த உணவை எடுத்துக் கொண்டாலோ, மன அழுத்தம் அதிகமாக வைத்திருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்யாத ஒரு நபராக இருந்தாலோ உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு சிலருக்கு வயது காரணமாகவும் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

நீங்கள் சொல்வது போன்று முன்பெல்லாம் 50 வயதை தொடும்போதுதான் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் காணப்பட்டது. ஆனால், சமீபகாலமாக டீன்ஏஜ் பருவத்திலிருக்கும் இளைஞர்கள் அதிகளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இன்றைய நவீன வாழ்க்கைமுறை மாற்றமே. இன்றைய இளைஞர்கள், வீட்டில் சமைக்கும் உணவுகளை காட்டிலும், வெளி உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். அதிலும் வாரஇறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து விதவித உணவுகளை ருசி பார்ப்பதும், இரவு நேரங்களில் குழுவாக சேர்ந்து ஃபுட் ஸ்ட்ரீட் போன்ற இடங்களுக்கு படையெடுப்பதும், ஆன்லைன் ஆப்கள் மூலம் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து உண்பதும்தான்.

உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, சீஸ், பர்கர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது அப்படியில்லை, ஜங்க் ஃபுட், பாஸ்ட் ஃபுட், பாக்கெட் உணவுகள், பொரித்த உணவுகள், வறுத்த உணவுகள், தந்தூரி வகைகள் என விதவிதமான உணவுகள் உலா வர தொடங்கிவிட்டன. அதன் கவர்ந்திழுக்கும் வண்ணங்களும் காரசாரமான மசாலாவின் சுவைக்கும் இளைஞர்கள் அடிமையாகி கிடக்கின்றனர். இதுவே, இளைஞர்களை உயர் ரத்த அழுத்தம் பாதிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

அதுபோன்று அந்தகாலத்தில், குழந்தைகள் வெளியே சென்று ஓடியாடி விளையாடினார்கள். ஆனால், தற்போது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு விளையாடும் ஆன்-லைன் விளையாட்டுகள் அதிகரித்துவிட்டது. இதனால், உடல் உழைப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால், இளைஞர்கள் மத்தியில் உடல் பருமனும் அதிகரித்து வருகிறது. மேலும், இளைஞர்கள் பலரும், இரவு நேரங்களில் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு செல்போனை அதிக நேரம் பார்ப்பது போன்றவையும் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் ஏற்பட ஒரு காரணமாகிறது.

உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன..

ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்றால், ஆரம்பநிலையில், அடிக்கடி தலைவலி வரும். அந்த தலைவலி தூங்கி எழுந்ததிலிருந்து ஒருநாள் முழுக்கக் கூட தொடர்ந்து இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல், ஒருவித எரிச்சல் இருக்கும் அடுத்தபடியாக கண் பார்வை மங்கலாக இருக்கும். தலைசுற்றல் இருக்கும். குமட்டல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், மயக்கம், நெஞ்சுவலி, வலிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ரத்த அழுத்தத்தின் ஒரு சில அறிகுறிகளாகும்.

சிகிச்சை முறைகள் என்னென்ன…

ரத்தகொதிப்புக்கான சிகிச்சை முறை என்றால், இளைஞர்களுக்கு கட்டாயம் உடல் உழைப்பு வேண்டும். உதாரணமாக, அருகில் இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது முடிந்த வரை நடந்து செல்வது, லிப்ட்டை அதிகம் பயன்படுத்தாமல், படிகளில் ஏறி செல்வது. நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது என ஏதாவது ஒருவகையில் உடல் உழைப்பு கட்டாயம் தேவை.

அதுபோன்று, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, ஜங்க் ஃபுட் அதிகளவில் சாப்பிடுவது போன்றவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். முடிந்தளவு இரவு 8 மணிக்குள் உணவை சாப்பிட வேண்டும். நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோன்று, உப்பு தன்மை அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என குடும்பத்தில் யாருக்கேனும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் இருந்தால், இளம் வயதிலிருந்தே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், முன்னெச்சரிக்கையாக ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்த அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், மேலே சொன்னது போன்ற அறிகுறிகளில் ஏதேனும் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், பெரும்பாலானவர்கள், சர்க்கரை நோய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உயர் ரத்த அழுத்தத்துக்கு கொடுப்பதில்லை. அதுபோன்று ரத்த அழுத்தத்தை ஒரு நோயாக கருதாமல் அலட்சியப்படுத்துகிறார்கள். அதிலும் சிலர், தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கூட தெரியாமலேயே வாழ்கின்றனர். இவ்வாறு அலட்சியப்படுத்தினால், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, இதய கோளாறுகள், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன..

இளைஞர்கள், பெரியவர்கள் என்று இல்லாமல் பொதுவாக அனைவருக்குமே உயர் ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு கட்டாயம் இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்திலும் விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும். ஏனென்றால், இளம் வயதில் எவ்வாறு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறோமோ அதைப் பொருத்துதான், வயது ஆக ஆக உடலின் ஆரோக்கியமும் இருக்கும். பொதுவாக, பலரும் இளம் வயது தானே இந்த வயதில் எதை சாப்பிட்டாலும், செறித்து விடும், எதை செய்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறார்கள். ஆனால், இளம் வயதில் செய்யும் ஒவ்வொரு செயலின் விளைவுகளும் வயதான பின்புதான் காண்பிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பராமரிப்பு மிக மிக அவசியமாகும். தினசரி அரைமணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். தினசரி 8 மணி நேர தூக்கம் மிகவும் முக்கியமானது.

உணவு பழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா…

நிச்சயமாக, உணவு பழக்கங்களில் மாற்றம் வேண்டும். ஜங்க் உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேலன்ஸ்டு டயட்டை பின்பற்ற வேண்டும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டிக்கும் குறைவான உப்பையே நாள் முழுவதுக்கும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரையைத் தவிர மறைமுகமாக சோடியம் சேர்க்கப்பட்ட பேக்கரி ஐட்டங்கள், ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரெடிமேட் உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், சோடா, சாஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பேக் செய்யப்பட்டுள்ள எல்லா வகையான உணவுகளிலும் சோடியம் ஒரு பிரிசர்வேட்டிவ்வாக பயன்படுத்தப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாகும்.

பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதால், இவற்றை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பீன்ஸ், பருப்பு வகைகள், பால், தயிர், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், இளநீர், பச்சை இலை காய்கறிகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, பூசணி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றில் இந்த தாதுக்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவக்கூடிய தாதுக்கள் ஆகும்.ஸ்ட்ராபெரி பழத்தில் காணப்படும் ஒரு ஆன்டிஆக்சிடன்டான அந்தோசயனின், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.தர்பூசணி பழத்தில் குறைந்த அளவு சோடியமும், அதிக அளவு நீர்ச்சத்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், லைகோபின் மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்டுகள் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது.

மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் இப்பழமும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மாதுளம்பழத்தில் காணப்படும் ACE என்ற நொதி ரத்த நாளங்களின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.அதுபோன்று, போதுமான அளவு தண்ணீர் பருகுதல், போதுமான அளவு தூக்கம் பெறுதல், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் சமமாக முக்கியமாக கருதப்படுகிறது.

தொகுப்பு: தவநிதி

The post இளைஞர்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்! appeared first on Dinakaran.

Related Stories: