பேயன்குழி பகுதியில் இரட்டைக்கரை சானல் கரையில் கொட்டப்படும் குப்பைகள் நோய் பரவும் அபாயம்

திங்கள்சந்தை, ஜூன் 21: நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழி இரட்டைக்கரை சானல் கரையோரம் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பேயன்குழி ஜங்ஷனில் இருந்து காரங்காடு, செருப்பங்கோடு, குருந்தன்கோடு செல்ல இரட்டைக்கரை சானல் கரையோரம் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும் வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரட்டைக்கரை கால்வாய் ஓரம் பேயன்குழி பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கழிவுகளை நாய்கள் மற்றும் கால்நடைகள் கிளறுவதால் கால்வாய்க்குள் விழுந்து தண்ணீர் வழியாக நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது, இரட்டைக்கரை கால்வாய் கரையோரம் குப்பைகளை குறிப்பிட்ட சிலரே கொட்டுகின்றனர். அவர்களிடம் சாலையோரம் குப்பைகளை கொட்ட வேண்டாம் என பல முறை கூறியும் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே இந்த குப்பை கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதுடன் மேற்கொண்டு அப்பகுதியில் குப்பைகள் கொட்டாத வகையில் எச்சரிக்கை பதாகைகளையும் வைக்க வேண்டும் என்றனர்.

The post பேயன்குழி பகுதியில் இரட்டைக்கரை சானல் கரையில் கொட்டப்படும் குப்பைகள் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: