நள்ளிரவில் போலீஸ் குடியிருப்பில் புகுந்து பெண் போலீசை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எஸ்ஐ கைது: டிஸ்மிஸ் செய்து ஐஜி அதிரடி உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் போலீஸ் குடியிருப்பில் நள்ளிரவு புகுந்து துப்பாக்கி முனையில் பெண் போலீசை பலாத்காரம் செய்த எஸ்ஐ கைது செய்யப்பட்டார். அவரை டிஸ்மிஸ் செய்து ஐஜி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் பூபாலப்பள்ளி மாவட்டம் காலேஸ்வரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பவானிசென்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் காலேஸ்வரம் லட்சுமி பம்ப்ஹவுஸ் பகுதி அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் பெண் தலைமை காவலர் ஒருவரும் வசிக்கிறார். இவருக்கும் திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். அவரிடம் எஸ்ஐ பவானிசென், நெருங்கி பழக முயற்சி செய்து வந்துள்ளார்.

ஆனால் அந்த பெண் தலைமை காவலர் இதை ஏற்காமல் விலகி இருந்துள்ளார். இதேபோல் கடந்த 15ம்தேதி பணி முடித்து தனது குடியிருப்புக்கு எஸ்ஐ பவானிசென் திரும்பினார். அன்று நள்ளிரவு பெண் தலைமை காவலரும் பணி முடிந்து தனது குடியிருப்புக்கு வந்தார். இதனை நோட்டம் விட்ட எஸ்ஐ, திடீரென பெண் தலைமை காவலரின் அறைக்குள் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு கதவை பூட்டிவிட்டு பெண் தலைமை காவலரிடம் அத்துமீற முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தலைமை காவலர் கூச்சலிட்டார். ஆனால் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டி பெண் தலைமை காவலரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

விசாரணையில் பவானிசென், கடந்த 2022ம் ஆண்டு ஆசிபாபாத் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அங்கிருந்த ஒரு பெண்ணையும் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் அவர் மீது 3 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் எஸ்ஐ பவானிசென் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கரீம்நகர் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பவானிசென்னை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து ஐ.ஜி. அதிரடியாக உத்தரவிட்டார்.

The post நள்ளிரவில் போலீஸ் குடியிருப்பில் புகுந்து பெண் போலீசை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எஸ்ஐ கைது: டிஸ்மிஸ் செய்து ஐஜி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: