டெல்டாவில் 3வது நாளாக மழை தஞ்சை, திருவாரூரில் 7,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது

தஞ்சை: மழை காரணமாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 7,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று 3வது நாளாக மழை பெய்தது. நாகையில் இரவு 8 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் இடி, மின்னல், காற்றுடன் மழை கொட்டியது.

பலத்த காற்று வீசியதில் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள மூன்று மற்றும் நான்காவது நடைமேடையில் இருந்த மேற்கூரை விழுந்து மின் கம்பியில் சிக்கியது. அப்போது நடைமேடையில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் நிகழவில்லை. இதனால் மூன்றாவது நடைபாதையில் செல்ல இருந்த அனைத்து ரயில்களும் ஐந்து மற்றும் 6வது நடைமேடை வழியாக திருப்பி விடப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேருந்து நிலையம் ரயில்வே கேட், பள்ளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதி முழுவதும் நேற்று மாலை மழை பெய்தது.

திருச்சியில் 3வது நாளாக நேற்று மாலை பலத்த காற்று மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பொதுமக்கள் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சித்தமல்லி, பரப்பனாமேடு, கோவில்வெண்ணி, ஆதனூர், ரிஷியூர், ராயபுரம், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பம்புசெட் பாசனம் மூலம் 16,500 ஏக்கரில் கோடை சாகுபடி செய்துள்ளனர். முன்பட்டத்தில் சாகுபடி செய்தவர்கள் இயந்திரம் மூலம் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் இந்த கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நனைந்து சாய்ந்தது. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதேபோல் தஞ்சையில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post டெல்டாவில் 3வது நாளாக மழை தஞ்சை, திருவாரூரில் 7,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: