சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

டெல்லி: சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளைப் பராமரிக்கவே இந்த சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஒன்றிய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பயிற்சிப்பட்டறை நடந்த நிலையில், அதில் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சுங்கக் கட்டணம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதாவது சாலைகள் சரியாக இல்லை என்றால் குறிப்பிட்ட சாலைகளுக்குச் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். மேலும், தரமான சேவையை வழங்கவில்லை என்றால் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. சரியான முறையில் மக்கள் நலனைக் காக்கும் வகையில் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளோம். தரமான சாலையை வழங்கினால் மக்களிடம் இருந்து சுங்கக் கட்டணத்தை வசூலிக்கலாம். சேறு சகதி இருக்கும் சாலை, குண்டும் குழியுமாக சாலையை வைத்துக்கொண்டு சுங்கக்கட்டணம் வசூலித்தால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என நிதின்கர்கரி கூறியுள்ளார்.

The post சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: