2 நாள் ‘சாகர் கவாச்’ தொடக்கம்; தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 8,500 போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: படகுகள், ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: கடல் மார்கமாக நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் 2 நாள் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த ஒத்திகையில் 8,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் கடந்த 2008 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்கமாக உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடுமுழுவதும் கடலோர மாநிலங்களில் ‘சகார் கவாச்’ உள்ளிட்ட பெயர்களில் மாநில போலீசாருடன் இணைந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, தூத்துக்குடி என 12 காவல் மாவட்டங்களில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் என மொத்தம் 8,500 போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திகையின் போது, போலீசாரே தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவது, மீனவர்களை சிறைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடலோர பகுதிகளில் போலீசார் படகுகள் மூலம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் மீனவ கிராமங்களில் ஊடுருவலில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து போலீசாருக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கடலோர பகுதிகளில் போலீசார் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post 2 நாள் ‘சாகர் கவாச்’ தொடக்கம்; தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 8,500 போலீசார் பாதுகாப்பு ஒத்திகை: படகுகள், ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: