தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்: கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை சௌந்தராஜன் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி மற்றும் அதற்கான காரணம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பது குறித்து கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை சௌந்தராஜன் சரமாரி புகார் தெரிவித்தார். இணையதளங்களில் பாஜக நிர்வாகிகளே ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளை பதிவிடுவதை தடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் செயல்பாட்டுக்கு தமிழிசை பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அமித் ஷா கண்டித்தார். அமித் ஷா கண்டித்த சில நாட்களில் தமிழிசையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து பேசினார். சந்திப்பு மூலம் அண்ணாமலை – தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் முடிந்ததாக கருதப்பட்ட நிலையில் தமிழிசை புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்: கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை புகார் appeared first on Dinakaran.

Related Stories: