பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரம்

 

கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கோடை காலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாபநாசம், கோபுராஜபுரம், பெருமாங்குடி, அரையபுரம், ராஜகிரி, பண்டாரவாடை, கோவில் தேவராயன் பேட்டை, மேல செம்மங்குடி, பொன்மான் மேய்ந்தநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளும், பருத்தி சாகுபடி பணிகளையும் விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நிலத்தை சமன்படுத்துதல், தயார் செய்தல், நவீன நடவு இயந்திரத்தின் மூலம் நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் தடை இல்லாமல் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருத்தி செடிகளுக்கு எந்திரம் மூலம் இடை உழவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பருத்தி கொள்முதல் குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் மூட்டைகளை தமிழக அரசு கொள்முதல் செய்வதுபோல் பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைக்கப்படும் விவசாயிகளின் விளை பொருளுக்கு ரூ.3 லட்சம் வரை அடமான கடன் உடனடியாக வழங்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, நெல், நிலக்கடலை, உளுந்து, பச்சை பயிறு, துவரை, மிளகாய், எள், கரும்பு, வெல்லம், தேங்காய், முந்திரி ஆகிய பொருட்களை கொள்முதல் செய்யும்போது விவசாயிகளுக்கு உடனடியாக பண பட்டுவாடா செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: