மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கை. மே மாதத்திற்கான பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் 100 விழுக்காடு அனைத்து கிடங்குகளுக்கும் அனுப்பி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாத தேவையில் 78,44,160 பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பாக்கெட்டுகள் வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

துவரம் பருப்பினைப் பொறுத்தவரையில் மே மாத ஒதுக்கீடான 1,89,89,000 கிலோவில் இன்றுவரை 1,37,79,000 கிலோ வழங்கப்பட்டு மீதமும் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜூன் மாத தேவையில் 40,16,000 கிலோ இதுவரை வழங்கப்பட்டு மீதியை வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான 13,000 மெ.டன் பருப்பு மற்றும் 1,10,00,000 பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டு கிடங்குகளுக்கு அனுப்பி அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆதலால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குரிய பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், ஜூன் மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: