பாஜவுடன் கூட்டணி வைத்தது எங்களுக்கு உறுத்தலாக உள்ளது: செல்லூர் ராஜூக்கு திடீர் ஞானோதயம்

மதுரை: எத்தனை தேர்தல்கள் வந்தாலும், எந்த காலத்திலும் பாஜ தமிழகத்தை ஆள முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை துவரிமான் அருகே நாக தீர்த்தத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணியை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை. ஜனநாயகம் நிலைக்கப் போவதில்லை என தெரிந்து விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை.

இடைத்தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஓபிஎஸ் அதிமுகவில் இருந்த காலக்கட்டத்திலும் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். பாஜவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளை வைத்து தமிழகத்தில் பாஜ வளர்ந்து விட்டது என கூற முடியாது. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எந்த காலத்திலும் பாஜ கட்சி தமிழகத்தை ஆள முடியாது.

பாஜ தமிழகத்தில் மதவாதத்தை முன் வைப்பதால் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது. தமிழகத்தை பொருத்தவரை பாஜ குட்டை தான். இங்கு வளரவே வளராது. சசிகலா, ஓ.பி.எஸ், அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியது மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்த கேள்விகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே விளக்கம் கூறி விட்டார். நடிகர் விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார். இவ்வாறு தெரிவித்தார்.

The post பாஜவுடன் கூட்டணி வைத்தது எங்களுக்கு உறுத்தலாக உள்ளது: செல்லூர் ராஜூக்கு திடீர் ஞானோதயம் appeared first on Dinakaran.

Related Stories: