பெரியபாளையம் அருகே ஏகாத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா: விரதம் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சி வாணியஞ் சத்திரம் கிராமத்தில் ஸ்ரீ ஏகாத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் அருக கன்னிகாபுரம் ஊராட்சி வாணியஞ் சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாத்தம்மன் கோயிலின் 16ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கடந்த 6ம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி கொடியேற்றும், கங்கை நீர் திரட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், ஏகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு கூழ்வார்த்தல், அன்று மாலை பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் பொங்கல் வைத்து படையல் இடுதல், கரகம் ஏந்தி எல்லை சுற்றி வருதல், 13ம் தேதி அன்று பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நாகாத்த அம்மனுக்கு பொங்கல் வைத்தல், 14ம் தேதி அன்று அக்னி சட்டி ஏந்தி வீதி உலா வருதல் உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

16ம் தேதி அன்று காலை மாலை என இரண்டு வேலைகளில் பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், இளநீர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விரதம் இருந்து காப்பு கட்டிய 280 பக்தர்கள், கங்கை நீராடி உடல் முழுவதும் பூக்களாலும் சந்தனத்தாலும் அலங்காரம் செய்து, பின்னர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் விழாவை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் விழா குழுவினரும் செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் அருகே ஏகாத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா: விரதம் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: