தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் விபத்து அபாயம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு நெல்லை வழித்தடத்தில் இருந்து வரும் பஸ்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. புதுக்கோட்டை ஊருக்குள் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் புறம் வழியாக வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இதற்கிடையே மேம்பாலத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரும் வாகனங்களும், மற்றும் பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடு வழியாக தூத்துக்குடி நோக்கி வரும் வாகனங்களும், ஒன்றிணைந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

மேம்பாலத்தின் வழியாக தூத்துக்குடிக்கு வரும் வாகனங்கள் நெடுஞ்சாலை என்பதால் பொதுவாக வேகமாக வரும். அதேநேரத்தில் சர்வீஸ் ரோட்டில் வந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்கள் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதால் அதை தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டி இருப்பதால் அந்த இடத்தில் இரு வழித்தடத்தில் வரும்வாகனங்களும் ஒன்றொடு ஒன்று மோதும் சூழல் ஏற்படுகிறது. இதனால் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே, இந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், விபத்துக்கு வழிவகைக்கும் அந்த பேரிகார்டை அகற்றவோ அல்லது அதை சாலையின் ஓரத்தில் வைக்கவோ அதிகாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: